மார்வெல் என்றாலே, அனைவருக்கும் மிகப் பிடித்த கதாபாத்திரங்களில் ஒன்று கேப்டன் மார்வெல் தான். ஒரு அசாதாரண பெண், இந்த பிரபஞ்சத்தையே காக்கும் ஒரு மனிதக் கடவுளாகப் பார்க்கப்படுகிறவர் அவர். உலகின் மிகவும் பிரம்மாண்ட படங்களில் ஒன்றான தி அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படத்தின் ஒரு கதாநாயகி போல, படத்தின் இறுதி காட்சியில் வந்தாலும், அனைவரது கவனத்தையும் பெற்ற கதாபாத்திரமாக அது அமைந்தது.
இத்தகைய கதாபாத்திரத்தில், அமெரிக்கரான ப்ரீ லார்சன் மட்டுமே நடித்து வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் நடந்த ஒரு பேட்டியில், பிரபல படைப்பாளிகளான ருஸோ சகோதரர்களிடன், பேட்டியாளர், “யாரை அடுத்த கேப்டன் மார்வலாகத் தேர்ந்தெடுப்பீர்கள்” எனக் கேட்டதற்கு, கண்டிப்பாக பிரியங்கா சோப்ராவைத் தான் என்று பதில் சொல்லி விட்டனர். இது அனைவரது கவனத்தையும் பெற்றது.
தி க்ரே மென் என்ற படத்தைக் கொடுத்த பிரபல ஹாலிவுட் படைப்பாளிகள் தான் ருஸோ சகோதரர்கள்.ரியான் கோஸ்லிங், க்ரிஸ் இவான்ஸ் இணைந்து நடித்த இந்த படத்தில், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் தனுஷ், ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதன் ப்ரொமோஷனுக்காக இந்திய வந்திருந்த ருஸோ சகோதரர்கள், பல பத்திரிக்கையாளர்களையும், சோசியல் மீடியா இன்ப்லூயன்சர்களையும் சந்தித்தனர்.
அதில் ஒருவர், அடுத்த கேப்டன் மார்வலாக யாரைத் தேர்ந்தெடுப்பீர்கள்? தீபிகா படுகோனேவா அல்லது ப்ரியங்கா சோப்ராவா? என்றுக் கேட்டதற்கு, யோசிக்காமல், கண்டிப்பாக ப்ரியங்காவைத் தான் தேர்ந்தெடுப்போம் என்று கூறினர். ஏன் எனக் கேட்டதற்கு, ப்ரியங்கா எங்களது தோழி. அவருடன் தற்போது ஒரு வெப் சீரியஸ் உருவாக்கியுள்ளதாகவும், அதில் ப்ரியங்கா நடித்து வருவதாகவும் தெரிவித்தனர்.
அமேசான் ப்ரைம் என்ற ஓடிடி தளத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் சிடாடெல் என்ற ஒரு சயன்ஸ் ஃபிக்ஷன் கதையாக உருவாக்கியுள்ளனர் ருஸோ சகோதரர்கள். அதில், பல சண்டைக் காட்சிகள் அற்புதமாக நடித்திருக்கிறார். இது குறித்த சிறு சிறு அப்டேட்டுகளை ப்ரியங்கா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த தொடரின் படபிடிப்பு, கடந்த ஜூன் 19ம் தேதி முடிந்த நிலையில், இதன் வெளியீட்டிற்காக படு ஆர்வமாகக் காத்து வருகின்றனர் ரசிகர்கள்.