"அனிருத் மட்டும் இல்லேன்னா ஜெயிலர் சுமார் தான்" அனிருத்தை மட்டும் ரஜினி புகழ்வது ஏன்?

தனக்கு வந்த புகழையும், பாராட்டுக்களையும் பிறருக்கு விட்டுக் கொடுக்கும் மனம் பலருக்கும் இருப்பதில்லை. ஆனால் தமிழ்நாடே, ஏன்? இந்தியாவே கொண்டாடும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனக்கான புகழை விட்டுக் கொடுத்ததுதான் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஆகஸ்ட் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி சக்கை போடு போட்டது ஜெயிலர் திரைப்படம். இந்த படத்தின் வெற்றியால் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கிய தயாரிப்பாளர் கலாநிதிமாறன், படக்குழுவினரை பரிசு மழையால் நனைய வைத்தார். 

ரஜினிகாந்துக்கு ஒரு கோடியே 24 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பி.எம்.டபிள்யூ எக்ஸ் 7, இயக்குநர் நெல்சனுக்கு ஒரு கோடியே 44 லட்சம் மதிப்புள்ள போர்ஸ்சே, இசையமைப்பாளர் அனிருத்துக்கு ஒன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள போர்ஸ்சே என ஆடம்பரக் கார்களை பரிசுகளாக வழங்கினார். மேலும் படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு தொழில்நுட்பக் கலைஞர்கக்கும் தங்க நாணயம் பரிசு வழங்கிய நிலையில் இதன் வெற்றி விழா சமீபத்தில் நடைபெற்றது. 

இந்த விழாவில் கலந்து கொண்ட ரஜினிகாந்த், ஜெயிலர் படம் எடுக்கப்பட்ட போது இசையில்லாமல் பார்த்த போது சுமாராக இருந்ததாகவும் அதனை அனிருத் தன் இசையால் மேஜிக் செய்து விட்டார் என்றும், பின்னணி இசையின் மூலம் படத்தை எங்கேயோ தூக்கி கொண்டு போய் விட்டார் என்றும் பேசினார்.

தான் நடித்த படத்தை சுமார் என கூறுவது தன்னடக்கம்தான் என்றாலும், படத்தின் வெற்றிக்கு காரணமான இயக்குநர் நெல்சன் ரஜினி கண்ணுக்கு தெரியாமல் போய் விட்டாரோ? ரத்த சொந்தம் அனிருத்துக்கு மட்டும் ஓரவஞ்சனை செய்வது ஏன்? என சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கேள்வி எழுப்புகின்றனர். 

ஜவான் வெற்றி அனிருத்திற்கு இந்தியில் மிகப்பெரிய வாய்ப்பை உருவாக்கி உள்ள சூழலிலும், ரஜினியின் இந்த பேச்சு அனிருத்தை இந்தியில் முக்கியத்துவம் கொடுக்கும் முயற்சியா என்ற கேள்விகளையும் கேட்கின்றனர் வலைதளவாசிகள்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com