பட்டாசு பேக்கிங்கிற்கு தடை செய்யப்பட்ட ப்ளாஸ்டிக் உபயோகம் குறித்து அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு..!

பட்டாசு பேக்கிங்கிற்கு  தடை செய்யப்பட்ட  ப்ளாஸ்டிக்  உபயோகம் குறித்து  அரசு பதிலளிக்க  உயர்நீதிமன்றம் உத்தரவு..!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசுகள் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கால் பொதியப்படவில்லை என்பதை உறுதி செய்ய   ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுத்துள்ளதா என  தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஒரு முறை பயன்படுத்தி வீசப்படும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. 

இந்த அரசாணையை எதிர்த்து தமிழ்நாடு மற்றும் புதுவை பிளாஸ்டிக் உற்பத்தியாளர் சங்கத்தின் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், அரசு உத்தரவை உறுதி செய்து தீர்ப்பளித்திருந்தது.

இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு, நீதிபதிகள் S.வைத்தியநாதன், P.T.ஆஷா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணையில் உள்ளது.

பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்கும் வகையில் மத்திய மாநில அரசுத் துறைகள், ரயில்வே, மாவட்ட நிர்வாகங்கள், மாசு கட்டுப்பட்டு வாரியம், ஆவின் பால் நிறுவனம் ஆகியவற்றிற்கு  அவ்வப்போது உத்தரவுகள் பிறப்பித்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பட்டாசுகளை பொதிய  ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பயன்படுத்தப்படவில்லை என்பதை உறுதி செய்ய  தமிழக அரசு ஏதும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுத்துள்ளதா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், இது குறித்து அரசின் விளக்கம் பெற்று தெரிவிக்க அவகாசம் வேண்டுமென கோரிக்கை வைத்தார்.

அப்போது மனுதாரர் தரப்பில் நேரடி கடைகளில் தான் விற்பனை தொடங்கவில்லையே தவிர, ஆன்லைனில் ஆர்டர்கள் எடுக்கப்பட்டு, பட்டாசுகள் வினியோகிக்கப்பட்டு  வருவதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த விவகாரத்தில் அரசு எடுத்த நடவடிக்கை குறித்து விளக்கம் அளிப்பதற்காக வழக்கின் விசாரணையை அக்டோபர் 30ஆம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

Related Stories

No stories found.
logo
Malaimurasu Seithigal Tv
www.malaimurasu.com