சிறைவாசிகளை விடுதலை செய்ய திட்டம்...அமைச்சர் தலைமையில் ஆலோசனை!

சிறையில் உள்ள கைதிகளை நன்னடத்தையின் அடிப்படையில் விடுவிக்க வேண்டும் என அரசியல் கட்சியினர் மற்றும் சமூக அமைப்பினர் அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.

சிறைவாசிகளை விடுதலை செய்ய திட்டம்...அமைச்சர் தலைமையில் ஆலோசனை!

புதுச்சேரி மத்திய சிறையில் வெவ்வேறு வழக்குகளில் தண்டனை பெற்று 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள தண்டனை கைதிகளை அவர்களின் நன்னடத்தையின் அடிப்படையில்  விடுவிப்பது தொடர்பாக உள்துறை அமைச்சர் தலைமையில் உயர் அதிகாரிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

காலாபட்டில் உள்ள மத்திய சிறையில் பல்வேறு குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டு தண்டை பெற்று 10 வருடங்களுக்கு மேலாக சிறையில் உள்ள கைதிகளை நன்னடத்தையின் அடிப்படையில் விடுவிக்க வேண்டும் என அரசியல் கட்சியினர் மற்றும் சமூக அமைப்பினர் அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் இது தொடர்பாக உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தலைமையில் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில்  தலைமை நீதிபதி செல்வநாதன், தலைமைச் செயலர் ராஜீவ் வர்மா, நீதி செயலர் கார்த்திகேயன், ஏடிஜிபி ஆனந்த மோகன், சிறை துறை ஐ. ஜி, ரவிதீப் சிங் சாகர், கண்காணிப்பாளர்கள் விஷ்ணு குமார்,செல்வம் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்,

இக்கூட்டத்தில் 27 கைதிகள் பெயர் பட்டியல் வைத்து அவர்களின் குற்ற பின்னணி தண்டனை காலம் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது, இதனிடையே கூட்டத்தில் யார் யார் விடுவிக்கப்படுவார்கள் என்பது குறித்து அதிகார பூர்வ அறிவிப்பு இன்றோ நாளையோ வெளியிடப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும் கடந்த மார்ச் மாதம் இதே  போல் நடந்த கூட்டத்தில் 4 தண்டனை கைதிகளை நன்னடத்தை அடிப்படையில்  புதுச்சேரி அரசு விடுவித்தது குறிப்பிடத்தக்கது.