நிலக்கரி இல்லாததால் 20 அனல்மின் நிலையங்கள் மூடல்…  

நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக, மகராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் 20 அனல்மின் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

நிலக்கரி இல்லாததால் 20 அனல்மின் நிலையங்கள் மூடல்…   

தீவிரமடைந்த பருவமழை, நிலக்கரி இறக்குமதி விலை உயர்வு, மின்சார பயன்பாடு உள்ளிட்ட காரணங்களால், நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கவலை தெரிவித்த டெல்லி, ஆந்திரா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்கள், மத்திய அரசு கூடுதல் நிலக்கரி ஒதுக்க வேண்டும் என கோரியிருந்தது. மேலும் முன்னெச்சரிக்கையாக செயல்படாத மத்திய அரசால், எதிர்காலத்தில் மின்கட்டணமும் அதிகரிக்கும் என காங்கிரஸ் குற்றஞ்சாட்டியிருந்தது.

இதனிடையே நேற்று மின் விநியோக நிறுவனங்களுடன் அவசர ஆலோசனை நடத்திய மத்திய நிலக்கரித்துறை அமைச்சர் ஆர்.கே.சிங், நாட்டில் போதுமான நிலக்கரி இருப்பு உள்ளதாக கூறினார். மேலும் எஸ்எம்எஸ் மூலம் மின்வெட்டு தொடர்பாக மின்விநியோக நிறுவனங்கள் போலி தகவல் அளித்ததாகவும் தெரிவித்தார். இருப்பினும் மத்திய அரசு பிரச்னைக்கு செவிமடுக்காமல், கண்மூடித்தனமாக செயல்படுவதாகவும், இது நாட்டை பாதிக்கும் எனவும் டெல்லி அரசு தெரிவித்தது. இந்தநிலையில் நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக பஞ்சாபில் 3 அனல்மின் நிலையங்கள், கேரளாவில் 4 மற்றும் மகராஷ்டிராவில் 13 என மொத்தம் 20 அனல்மின் நிலையங்கள் மூடப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இதனிடையே நிலக்கரி தட்டுப்பாடு தொடர்பாக உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர், தங்களது மாநிலத்தில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் அவரச ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். கையிருப்பில் உள்ள நிலக்கரி நிலவரம், மற்றும் சிக்கனமாக நிலக்கரியை பயன்படுத்தி மின்வெட்டை தடுப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது