இந்தியாவின் எல்லைக்குள் ஊடுறுவ முயற்சிக்கும் 3வது நாடு - அமைச்சர் விளக்கம்!

இந்தியாவின் எல்லைக்குள் ஊடுறுவ முயற்சிக்கும் 3வது நாடு - அமைச்சர் விளக்கம்!

எல்லையில் நிலவும் பதற்றம் காரணமாக சீனாவுடனான உறவு சுமூகமாக இல்லை என கூறியுள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், 3வது நாட்டின் தலையீடு புதிய பிரச்சனையாக அமைந்துள்ளதாகவும் கவலை தெரிவித்துள்ளார்.

லடாக் பகுதியில் ஊடுறுவிய சீனப்படை:

ஜம்மு-காஷ்மீரின் லடாக் பகுதியில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சீனப்படை சட்டவிரோதமாக ஊடுறுவியது. அது முதல் எல்லைகளில் இருதரப்பிலும் படைகள் குவிக்கப்பட்டு வீரர்கள் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.  மேலும்  படைகளை விலக்குவதற்கான பேச்சுவார்த்தையும் ராணுவ ரீதியில் நடைபெற்று வருகிறது. 

கிராமங்களை உருவாக்கி வரும் சீனா:

இதனிடையே இந்தியாவை அச்சுறுத்தும் வகையில், லடாக் எல்லையில் பாலங்களை அமைத்து ஒரு கிராமத்தையே சீனா உருவாக்கி வருகிறது. இது மேலும் பதற்றத்தை அதிகரிக்க செய்துள்ளது.  

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்:

சீனாவால் ஏற்பட்ட இந்த பதற்றத்திற்கு இடையே, பெங்களூருவில் செய்தியாளர்கள் சந்திப்பில் சீனா பிரச்னை குறித்து விரிவாக பேசிய ஜெய்சங்கர், சீனாவுடனான உறவு சுமூகமாக இல்லை எனக் கூறினார். எல்லையில் பதற்றத்தை அதிகரிக்க சீனா,  மேலும்  முயற்சித்தால், இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் விரிசல் அதிகரிக்கும் என்றும், தற்போதைய நிலையை சமாளிக்க எல்லையில் ராணுவம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறினார். 

3வதாக ஒரு நாடு ஊடுறுவும் முயற்சி:

தொடர்ந்து சீனா- பாகிஸ்தான் இடையிலான பொருளாதார சாலை பற்றி பேசிய அவர், ஏற்கனவே இந்தியப் பகுதியை சட்டவிரோதமாக ஆக்ரமித்து சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருவதாக குறிப்பிட்டார். தொடர்ந்து, இந்தியாவின் பிராந்திய ஒற்றுமைக்கும், இறையாண்மைக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்திடும் விதமாக, இந்தியாவின் எல்லைக்குள் 3வதாக மேலும் ஒரு நாடு ஊடுறுவும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் ஜெய்சங்கர்  குறிப்பிட்டுள்ளார்.