இலங்கை மீனவர்கள் 5 பேர் கைது!!

இலங்கை மீனவர்கள் 5 பேர் கைது!!
Published on
Updated on
1 min read

கன்னியாகுமரி அருகே இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த இலங்கை மீனவர்கள் 5 பேரை கடலோர காவல்படையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

இந்திய கடல் பகுதிக்குள் அந்நியர்கள் அத்துமீறி நுழைவதை தடுக்கவும், கடத்தல் சம்பவங்களை தடுக்கவும் தூத்துக்குடி கடலோர காவல்படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  அதன்படி கடலோர காவல்படையினர் ரோந்து கப்பல் 'வஜ்ரா'வில் சென்று கண்காணித்தனர்.

அப்போது கன்னியாகுமரியில் இருந்து சுமார் 60 கடல் மைல் தொலைவில் இந்திய எல்லைக்குள் ஒரு இலங்கை படகு அத்துமீறி நுழைந்து இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து கடலோர காவல்படையினர் விரைந்து சென்று அந்த படகை சுற்றிவளைத்தனர்.  அந்த படகில் இலங்கையை சேர்ந்த 5 மீனவர்கள்இருந்தனர்.  இந்தியஎல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக அவர்கள் 5 பேரையும் கடலோர காவல்படையினர் கைது செய்து அவர்களையும், படகையும் தூத்துக்குடி தருவைகுளம் மீன்பிடிதுறைமுகத்திற்கு கொண்டு வந்தனர்.

அந்த மீனவர்கள் உரிய விசாரணைக்கு பிறகு தருவைகுளம் கடலோர பாதுகாப்பு போலீசாரிம் ஒப்படைக்கப்பட்டனர்.  தொடர்ந்து அவர்களிடம், தருவைகுளம் கடலோர பாதுகாப்பு போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் இலங்கை நீர் கொழும்பு பகுதியைச் சேர்ந்த அண்டன்பெனில், விக்டர் இமானுவேல், ஆனந்தகுமார், ரஞ்சித் சிரன்லிபன், ஆண்டணிஜெயராஜா ஆகிய 5 மீனவர்கள் என தெரியவந்தது.

தொடர்ந்து அவர்களது விசைபடகில் இருந்த 150 கிலோமீன் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து மத்திய உளவுப்பிரிவு, க்யூபிரிவு, கடலோர பாதுகாப்பு குழும போலீசார் கைது செய்யப்பட்ட மீனவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த இலங்கை படகு, மீனவர்கள் பிடிபட்டு இருப்பது பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com