இந்திய தலைநகர் டெல்லியில் சுதந்திர தினக் கொண்டாட்டம்!

நாடு முழுவதும் 75வது சுதந்திர தின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக் கொடி ஏற்றி உரையாற்றவுள்ளார்.

இந்திய தலைநகர் டெல்லியில் சுதந்திர தினக் கொண்டாட்டம்!
நாடு முழுவதும் இந்திய சுதந்திரத்தின் 75 ஆண்டு அமிர்தப் பெருவிழா இன்று கொண்டாடப்படுகிறது.
 
இதனையொட்டி, இன்னும் சற்று நேரத்தில் டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடி ஏற்றுகிறார். முன்னதாக, டெல்லி செங்கோட்டைக்கு வரும் பிரதமர் மோடியை பாதுகாப்புத்துறை அமைச்சர்  ராஜ்நாத் சிங், பாதுகாப்புத் துறை இணையமைச்சர் அஜய் பட் மற்றும் பாதுகாப்புத்துறை  செயலாளர் டாக்டர் அஜய் குமார் ஆகியோர் வரவேற்கவுள்ளனர். பின்னர், பிரதமருக்கு அளிக்கப்படும் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்வார். 
 
இந்த அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட பிறகு பிரதமர் மோடி செங்கோட்டையில் உள்ள விழா மேடைக்குச்  செல்கிறார். அவரை பாதுகாப்புத்துறை அமைச்சர்  ராஜ்நாத் சிங், இணையமைச்சர்  அஜய் பட், ராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே, கடற்படைத் தளபதி அட்மிரல் ஆர் ஹரி குமார் மற்றும் விமானப்படைத் தளபதி ஏர் சீஃப் மார்ஷல் வி ஆர் சவுத்ரி ஆகியோர் வரவேற்று வாழ்த்து தெரிவிக்கவுள்ளனர். 
 
பின்னர் தேசியக் கொடியை ஏற்றி வைக்க, கோட்டையில் உள்ள மேடைக்கு பிரதமர்  அழைத்துச் செல்லப்படுவார். தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி சரியா காலை 8 மணிக்கு மூவர்ணக் கொடியை ஏற்றிய பிறகு, 'தேசிய வணக்கம்' செலுத்தப்படவுள்ளது.
 
தேசிய கொடியை ஏற்றும்போது பாரம்பரிய முறைப்படி மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஹோவிட்சர் பீரங்கி மூலம் 21 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்படுகிறது.  பிரதமர் தேசியக் கொடியை ஏற்றியவுடன், இரண்டு எம்ஐ-17 1வி ஹெலிகாப்டர்கள் மூலம் மலர் தூவி மரியாதை செலுத்தப்படும். 20 பேர் கொண்ட விமானப்படை இசைக்குழுவால்  தேசிய கீதம் இசைக்கப்படும். 
 
பிரதமர் தேசியக் கொடியை ஏற்றும் போது விமானப்படை, ராணுவம், கடற்படை மற்றும் டெல்லி காவல்துறையைச் சேர்ந்த 5 அதிகாரிகள் மற்றும் 128 பேர் அடங்கிய தேசியக் கொடிக் காவலர்கள் தேசிய வணக்கம் செலுத்துவர். தொடர்ந்து பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். பிரதமரின் உரை முடிந்ததும் நாடு முழுவதிலும் இருந்து தேர்வு செய்யப்பட்ட 792 தேசிய மாணவர் படையினர் தேசியக் கீதத்தைப் பாடவுள்ளனர். 
 
இந்த சுதந்திர தின விழாவில் அங்கன் வாடி பணியாளர்கள், தெருவோர வியாபாரிகள், முத்ராதிட்டத்தில் கடன் பெறுபவர்கள் மற்றும் பிணவறை பணியாளர்கள் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டுள்ளனர். விழாவையொட்டி, நாடு முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.