இப்படியே போனால்.. உக்ரைன் நிலைமை தான் இந்தியாவுக்கும் - ராகுல் காந்தி எச்சரிக்கை

பல்வேறு அமைப்புகளால் இந்தியா பிளவுப்படுத்தப்பட்டிருப்பதாக குற்றஞ்சாட்டியுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, உக்ரைனின் நிலையே இந்தியாவிற்கும் ஏற்படும் அபாயம் இருப்பதாக எச்சரித்துள்ளார்.

இப்படியே போனால்.. உக்ரைன் நிலைமை தான் இந்தியாவுக்கும் - ராகுல் காந்தி எச்சரிக்கை

டெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது பேசிய ராகுல் காந்தி, ஒரு காலத்தில் ஒன்றுபட்டு இருந்த இந்தியா, தற்போது  பிளவுப்படுத்தப்பட்டு தனித்தனி பிரிவுகளாக காணப்படுவதாக கவலை தெரிவித்தார்.

 இந்தியாவில் பெட்ரோல், டீசல், எரிவாயு விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் அப்போது குறிப்பிட்டார். இலங்கையில் கடந்த சில ஆண்டுகளாக பொருளாதார நெருக்கடி நிலை நீடித்த நிலையில், தற்போது அது வெளிச்சத்திற்கு வந்துள்ளதாகவும், இந்தியாவிலும் இதே நிலை கடந்த 3 ஆண்டுகளாக நீடிப்பதாகவும் குறை கூறினார்.

ஆனால் அதனை ஊடகங்களும், பாஜக தலைவர்களும், ஆர்எஸ்எஸ் அமைப்பினரும் மறைத்து வருவதாக சாடிய  ராகுல்காந்தி , இலங்கையை போல் நிச்சயம் ஒரு நாள் உண்மை வெளிவரும் எனவும் ஆதங்கம் தெரிவித்தார்.

மேலும் உக்ரைன் எல்லை பகுதியான டோனெட்ஸ்க் மற்றும் லூகான்ஸ் பகுதிகளை உரிமை கோரி ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவதை சுட்டிக்காட்டிய ராகுல்காந்தி, இதே யுத்தியை இந்தியா மீது சீனா பிரயோகித்து வருவதாக  குறிப்பிட்டுள்ளார்.

அருணாச்சல பிரதேசம் மற்றும் லடாக் எல்லையை சீனா தங்களது பகுதிகளாக உரிமை கோரி வருவதாகவும், ரஷ்யா- உக்ரைன் போரை கருத்தில் கொண்டு, சீனாவுடனான எல்லை பிரச்னையில் மத்திய அரசு விழிப்புடன் செயல்படவேண்டும் எனவும் ராகுல் காந்தி எச்சரித்துள்ளார்.