நாடு முழுவதும் மீண்டும் அதிகரிக்க தொடங்கிய கொரோனா பாதிப்பு..! ஒரே நாள் பாதிப்பு இவ்வளவா?

நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 2 ஆயிரத்து 380 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

நாடு முழுவதும்  மீண்டும் அதிகரிக்க தொடங்கிய கொரோனா பாதிப்பு..! ஒரே நாள் பாதிப்பு இவ்வளவா?

டெல்லி, மகாராஷ்டிரா மட்டுமின்றி நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு படிப்படியாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் 4 ஆம் அலை ஏற்படுவதற்கான அச்சம் மக்களிடையே அதிகரித்து காணப்படுகிறது. பாதிப்பு அதிகரிப்பதை தொடர்ந்து டெல்லி-யில் மீண்டும் முககவசம், சமூக இடைவெளி போன்ற கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்திலும் மக்கள் முககவசம் அணிய வேண்டும் என்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 2 ஆயிரத்து 380 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதனால் நாட்டில் தினசரி பாதிப்பு விகிதம் 0. 53 சதவீதமாக அதிகரித்துள்ளது. மேலும் நேற்று மட்டும் தீவிர தொற்று பாதிப்புக்கு 56 பேர் பலியாகியுள்ளனர்.

இதனிடையே நேற்று மட்டும் ஆயிரத்து 231 பேர் தொற்று பாதிப்பு நீங்கி வீடு திரும்பியுள்ளதாகவும் நாடு முழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில் 13 ஆயிரத்து 433 பேர் தொற்று பாதிப்பு சிகிச்சை பெற்று வருவதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் இதுவரை 187 கோடியே, 7 லட்சத்து 8 ஆயிரத்து 111 டோஸ் தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.