டெல்லியை அச்சுறுத்தும் காற்று மாசுபாடு..நிபுணர்கள் எச்சரிக்கை..!

டெல்லியில் கடந்த சில வருடங்களாகவே காற்று மாசுபாடு அதிகரித்து காணப்படும் சூழலில், இந்தாண்டு இதன் பாதிப்பு இன்னும் கூடுதலாக இருக்கும் என டெல்லி நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.  

டெல்லியை அச்சுறுத்தும் காற்று மாசுபாடு..நிபுணர்கள் எச்சரிக்கை..!

உலக அளவில் காற்று மாசு அதிகம் உள்ள நகரங்களின் பட்டியலில் டெல்லியும் ஒன்று..! வழக்கமான நாட்களில் தூசி காரணமாக காற்று மாசுபாட்டை சந்திக்கும் டெல்லி செப்டம்பர் முதல் நவம்பர் வரை புகையினால் ஏற்படும் காற்று மாசுபாட்டை பெரிய அளவில் சந்திக்கிறது. காரணம், டெல்லியின் அண்டை மாநிலங்களான ஹரியானா, உத்தரபிரதேசம் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் நெற்பயிர்களை அறுவடை செய்த விவசாயிகள் கோதுமை விதைக்க அறுவடை செய்த பின்பு சேகரமாகும் அதன் குப்பையை தீயிட்டு கொளுத்திவிடுவார்கள்.

இதனால் ஏற்படும் நச்சு புகை டெல்லியின் இயற்கையை பாதித்து காற்று மாசுபாட்டை பெருமளவில் ஏற்படுத்தும். இவை வருடா வருடம் ஏற்படும் பாதிப்பு தான் என்றாலும் கூட.. இந்தாண்டு அதிகளவில் காற்று மாசுபாடு ஏற்பட போகிறது என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். வரும் செப்டம்பர் 15-ம் தேதி முதல் அண்டை மாநிலங்களில் விவசாயிகள் பயிர்களின் குப்பையை எரிக்க தொடங்குவார்கள், இதன் கால அளவு நவம்பர் இறுதி வரை நீடிக்கும். இந்த முறை 2022-ம் ஆண்டு உத்தரபிரதேசம் மற்றும் ஹரியானா மாநிலங்கள் தேர்தலை சந்திக்க இருப்பதால் பயிர்களை எரித்த விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் கடந்த ஆண்டை விட இந்தாண்டு விவசாயிகள் பெரிய அளவில் விவசாய கழிவுகளை எரிப்பார்கள் என கூறப்படுகிறது. மேலும், தேர்தலை மையப்படுத்தி மாநிலத்தை தூய்மை படுத்து நோக்கில் குப்பைகளும் சேர்ந்து எரிக்கப்படும் என்பதால் வழக்கத்தை விட அதிகளவு நச்சு புகை டெல்லியை சூழும் அபாயம் உள்ளது என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும் வகையில் செப்டம்பர் 20-ம் தேதி முதல் குப்பைகளை எரிக்கும் அளவை கண்காணிக்க மத்திய சுற்றுசூழல் அமைச்சகம் 3 மாநில அரசையும் ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளது.

டெல்லி அரசை பொறுத்தவரை "பார்டிகல்ஸ்" எனப்படும் காற்று மாசுவை கட்டுப்படுத்தும் வகையில் 55 இடங்களில் சுமோக் கன் நிறுவப்பட்டுள்ளது. மேலும், டெல்லி கெனாட் பிளேஸ் பகுதியில் சுமோக் டவர் ஒன்றும் நிறுவப்பட்டுள்ளது. இதன்மூலம் 20 ஆயிரம் சதுர மீட்டர் அளவுக்கு காற்று மாசினை கட்டுப்படுத்த முடியும் என டெல்லி அரசு யூகித்துள்ளது. இருப்பினும் இப்போதே டெல்லியின் தொழிற்சாலை அடங்கிய பகுதிகளில் காற்று மாசு கணிசமாக அதிகரித்துள்ள நிலையில், இதனை மத்திய, மாநில அரசுகள் தீவிர பிரச்னையாக கருத வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.