லடாக்கில் ராணுவ வாகனம் ஆற்றில் கவிழ்ந்து விபத்து.. 7 ராணுவ வீரர்கள் உயிரிழந்த பரிதாபம் - பிரதமர் மோடி, ராகுல் காந்தி இரங்கல்

லடாக்கில் ராணுவ வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்த 7 ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

லடாக்கில் ராணுவ வாகனம் ஆற்றில் கவிழ்ந்து விபத்து.. 7 ராணுவ வீரர்கள் உயிரிழந்த பரிதாபம் - பிரதமர் மோடி, ராகுல் காந்தி இரங்கல்

லடாக்கின் பர்தாபூர் முகாமிலிருந்து 26  ராணுவ வீரர்களை ஏற்றிக் கொண்டு ஹினிப் பகுதியில் உள்ள கண்காணிப்பு முகாமிற்கு ராணுவ வாகனம் சென்று கொண்டிருந்தது.

தோயிஸ் என்ற பகுதியில் வாகனம் சென்று கொண்டிருந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, ஷியோக் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.  இந்த விபத்தில், 7 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 19 வீரர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவில், லடாக்கில் நடந்த விபத்தில் எங்களது துணிச்சலான ராணுவ வீரர்களை இழந்துவிட்டோம் என தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைவார்கள் என நம்புவதாகவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்பட்டு வருவதாகவும் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.

ராகுல்காந்தி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், லடாக்கில் இந்திய ராணுவ வீரர்களுக்கு நேர்ந்த சோகமான விபத்து குறித்து அறிந்து மிகவும் வருத்தமடைந்ததாகக் கூறியுள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன், காயமடைந்த நமது வீரர்கள் விரைவில் குணமடைய வேண்டுவதாகவும் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

இதேபோல், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட தலைவர்களும் விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.