காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடும் மூத்த தலைவர்கள்...அப்போ ராகுல்காந்தி?

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடும் மூத்த தலைவர்கள்...அப்போ ராகுல்காந்தி?

காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அப்பதவிக்கு மூத்த தலைவர்களான கேரள எம்.பி.சசிதரூர் மற்றும் ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் ஆகியோர் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

பதவி விலகிய ராகுல்:

காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்து வந்த ராகுல் காந்தி, கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் ஏற்பட்ட  தோல்விக்கு பொறுப்பேற்று பதவி விலகினார். 

இடைக்கால தலைவர்:

காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து ராகுல் காந்தி விலகிய நாள் முதல் கட்சியில் நிரந்தர தலைவர் இல்லாத சூழல் காணப்படுகிறது. இதனிடையே கட்சியின் தேவைக்காக இடைக்கால தலைவராக சோனியா காந்தி பதவி வகித்து வருகிறார். 

தலைவர் தேர்தல்:

காங்கிரஸ் கட்சியின் தலைவராக மீண்டும் ராகுலையே தேர்ந்தெடுப்பதற்கு  கட்சியினர் ஆர்வம் காட்டியும், அவர் முன்வராததால், காங்கிரஸ் சார்பில் தலைவர் பதவிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் வருகிற செப்டம்பர் 24ம் தேதி தொடங்கி செப்டம்பர் 30ம் தேதி வரை நடைபெறவுள்ளது. தேர்தலானது அடுத்த மாதம் 17ம் தேதி நடைபெறவுள்ளது. 

இதையும் படிக்க: திமுகவில் இருந்து விலகினார் துணை பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன்..2021 தோல்வி தான் காரணமா?

தீர்மானம் நிறைவேற்றம்:

இதனிடையே ராகுல் தான் கட்சி தலைவராக வேண்டும் என சட்டீஸ்கர்,  ராஜஸ்தான், தமிழகம் மற்றும் புதுச்சேரி காங்கிரசார் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.  ஆனால், சோனியா காந்தியின் குடும்பம் சார்பில் யாரும் போட்டியிடப்போவதில்லை என தகவல் சொல்லப்படுகிறது. 

இந்தியா ஒற்றுமை பயணம்:

காங்கிரஸ் கட்சியின் தலைவரை தேர்தெடுக்கும் தேர்தல் நடைபெறவிருக்கும் இந்நேரத்தில், இந்தியாவை ஒன்றிணைக்கும் 150 நாட்கள் நடைப்பயணத்தை ராகுல் காந்தி தொடங்கியுள்ளது அவர் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு இல்லை என்பதையே குறிப்பிடுகிறது என காங்கிரஸ் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

தலைவர் பதவிக்கு இருவர் போட்டி:

இந்தநிலையில் தலைவர் பதவிக்கு காந்தி குடும்பத்தின் நீண்ட நாள் விசுவாசியான, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டும், கேரள எம்.பி.யும், ஜி-23 குழுவின் முக்கிய உறுப்பினரான சசிதரூர் ஆகியோரும் போட்டியிட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக நேற்று சோனியா காந்தியை நேரில் சந்தித்த சசிதரூர் அதற்கான அனுமதியை பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. தேர்தலில் சசிதரூர் வெற்றிப்பெற்றால், கட்சியில் பல்வேறு சீர்த்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என காங்கிரஸ் வாட்டாரங்களில் சொல்லப்படுகிறது. இந்த தகவலின் மூலம் ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவராக வருவதற்கு வாய்ப்பு குறைவு என்பது தெரியவந்துள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.