புதிய முதலமைச்சராகிறார் பசவராஜ் பொம்மை... பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முடிவு...

கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக இன்று காலை 11 மணிக்கு பதவியேற்று கொள்ள  உள்ள பசவராஜ் பொம்மைக்கு அம்மாநில ஆளுனர் பதவி பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைக்கிறார்.

புதிய முதலமைச்சராகிறார் பசவராஜ் பொம்மை... பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முடிவு...
கர்நாடக மாநிலத்தில் பாஜக அரசு பதவியேற்று இரண்டு ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், முதலமைச்சர் எடியூரப்பா ஆளுநரை சந்தித்து தனது ராஜிநாமா கடிதத்தை வழங்கினார். இதையடுத்து அடுத்த முதலமைச்சரை தேர்வு செய்ய பாஜக சார்பில் அனுப்பி வைக்கப்பட்ட மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான் மற்றும் கிஷன் ரெட்டி அம்மாநில பா.ஜ.க. எம்.எல். ஏ.க்களுடன் ஆலோசனை மேற்கொண்டனர். இதில் கர்நாடக அமைச்சர்கள், பாஜக எம்.எல். ஏ.க்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 
பெங்களூருவில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த எடியூரப்பாவும் கலந்துகொண்டார். இந்த ஆலோசனையின் இறுதியில், கர்நாடக மாநிலத்தின் உள்துறை அமைச்சராக பதவி வகித்து  வந்த பசவராஜ் பொம்மையை கர்நாடக முதலமைச்சராக தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டது.
 
இதையடுத்து கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பாவிடம்  பசவராஜ் பொம்மை ஆசி பெற்றார். அதை தொடர்ந்து  புதிய முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்ட பசவராஜ் பொம்மைக்கு அமைச்சர்கள் மற்றும் எம்எல் ஏக்கள் பூங்கொத்து  கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.  
 
இந்த நிலையில், கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பசவராஜ் பொம்மை இன்று காலை 11 மணிக்கு பதவியேற்று கொள்கிறார்.  அவருக்கு அம்மாநில ஆளுனர் பதவி பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைக்கிறார்.