மக்களே! கனமழைக்கு தயாராக இருங்கள்- கேரளா முதல்வர் அறிவிப்பு  

கனமழைக்கு மக்கள் தயாராக இருக்கும்படி கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் கேட்டுக்கொண்டுள்ளார். 

மக்களே! கனமழைக்கு தயாராக இருங்கள்- கேரளா முதல்வர் அறிவிப்பு   

குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கேரளாவின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது.  கோட்டயம், பத்தனந்திட்டா  உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. எங்கும் முட்டியளவுக்கு வெள்ளம் தேங்கி, மலைப்பாங்கான பகுதிகளில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளதால் மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். அம்மாநிலத்தில் மேலும் 4 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் நிரம்பும் நிலையில் உள்ள அணைகளிலிருந்து அதிகப்படியான உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன்காரணமாக கொல்லத்தில் உள்ள கல்லடா உள்ளிட்ட ஆறுகளில் காட்டாற்று வெள்ளம் போல் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது.

இதுதவிர கனமழையால் பல இடங்களில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 15 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 12-க்கும் அதிகமானோரை காணவில்லை  எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மாநில அரசின் வேண்டுகோளை அடுத்து, ராணுவம், விமானப்படையினர், தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் வெள்ளத்தில் தத்தளிப்போரை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நிலச்சரிவு ஏற்பட்ட கோட்டயம்  காவேலியில், ராணுவம், மீட்பு பணியில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹெலிகாப்டர்கள் மற்றும் தெற்கு ஏர் கமாண்டின் கீழ் உள்ள அனைத்து விமான தளங்களும் தயார் நிலையில் உள்ளன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிக்காக ராணுவ வீரர்கள் அனுப்பப்பட்டுள்ளனர். கோட்டயம்- இடுக்கி எல்லையில் உள்ள கூட்டிக்கல் பகுதியில் கனமழையால் மரங்கள் சரிந்துள்ளன. அவற்றை அப்புறப்படுத்தி, இடிபாடுகளை அகற்றும் பணியில் பேரிடர் மீட்பு குழுவினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதுமட்டுமல்லாது, அரசு சார்பில் 105 முகாம்கள் அமைக்கப்பட்டு, மக்கள்  பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். கோட்டயம், கோட்டிக்கல் பகுதியில் உள்ள மக்களுக்கு ராணுவ விமானம் மூலம் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

இந்தநிலையில், கனமழைக்கும் மக்கள் தயாராக இருக்கவும், முகாம்களில் இருப்போர் சமூக இடை வெளியை பின்பற்றி இருக்கவும் அம்மாநில முதலமைசச்ர் பினராயி விஜயன் அறிவுறுத்தியுள்ளார். அதுமட்டுமல்லாது மீட்கப்படும் மக்களுக்காக 105 முகாம்கள் அமைத்துள்ளதாகவும், கூடுதல் முகாம்கள் அமைக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.

கேரளாவின் தற்போதைய நிலை குறித்து டிவிட்டரில் பதிவிட்ட மத்திய அமைச்சர் அமித் ஷா, நிலைமையை கண்காணித்து வருவதாகவும், மக்களுக்கு தேவையான உதவியை மத்திய அரசு செய்து கொடுக்கும் எனவும் உறுதி கூறியுள்ளார். அதுமட்டுமல்லாது மக்களின் பாதுகாப்புக்காக இறைவனிடம் பிரார்த்திப்பதாகவும் கூறியுள்ளார்.