நேபாளத்தில் விமான விபத்தில் உயிரிழந்த 22 பயணிகளின் உடல்கள் மீட்பு

நேபாளத்தில் விமான விபத்தில் உயிரிழந்த 22 பயணிகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது.

நேபாளத்தில் விமான விபத்தில் உயிரிழந்த 22 பயணிகளின் உடல்கள் மீட்பு

நேபாள நாட்டில் தாரா ஏர் நிறுவனத்தின் சார்பில் அங்குள்ள சுற்றுலாத் தலங்களுக்கு பொதுமக்கள் செல்ல சுற்றுலா விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் நேற்று முன்தினம் காலை நேபாளத்தின் பொக்காரோ விமான நிலையத்திலிருந்து சிறிய ரக 9 என்ஏஇடி விமானம் 22 பயணிகளுடன் ஜோம்சோம் நகருக்கு கிளம்பியது இந்த விமானத்தில் 4 இந்தியர்கள், 2 ஜெர்மானியர்கள், 13 நேபாளிகள், 3 நேபாள ஊழியர்கள் என 22 பேர் பயணித்தனர்.

விமானம் புறப்பட்ட 15 நிமிடங்களில் விமான நிலையத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையின் ரேடார் பார்வையில் இருந்து மறைந்து மாயமானது. இதையடுத்து விமானத்தை தேடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். தீவிர தேடுதலுக்குப் பின்னர் விமானம் இமயமலை தவளகிரி சிகரம் அருகே பனிபடர்ந்த மலையடிவாரப் பகுதிக்குள் விழுந்து நொறுங்கியது தெரியவந்தது.

இதையடுத்து உடல்களை மீட்கும் பணி தொடங்கியதை தொடர்ந்து விமானத்தில் பயணம் செய்த 22 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதனிடையே விமானத்தின் கருப்பு பெட்டியும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை ஆய்வு செய்த பிறகே விமானம் விபத்துக்குள்ளானது குறித்த உண்மை விவரங்கள் தெரியவரும்.