மீண்டும் அதே விவகாரம்... 4வது நாளாக முடங்கியது நாடாளுமன்றம்...!

மீண்டும் அதே விவகாரம்... 4வது நாளாக முடங்கியது நாடாளுமன்றம்...!

ராகுல் விவகாரம் தொடர்பாக பாஜக அமைச்சர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டதால், நாடாளுமன்றம் 4வது நாளாக முடங்கியது. 


நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2ம் அமர்வு கடந்த 13ம் தேதி தொடங்கிய நிலையில், இந்தியாவில் ஜனநாயகம் கேள்விக்குறியாகியுள்ளதாக லண்டனில் ராகுல்காந்தி கூறியதை சாடி, கூட்டத்தின் முதல் நாளில் இருந்தே பாஜக அமைச்சர்களும் எம்பிக்களும் அமளியில் ஈடுபட்டு வந்தனர். இதனால் மக்களவை அதிகபட்சம் 5 நிமிடங்களும் மாநிலங்களவை அதிகபட்சம் 20 நிமிடங்களும் மட்டுமே கூடிய நிலையில், தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வந்தது. 

முன்னதாக நாடாளுமன்றம் கூடுவதற்குமுன், மாநிலங்களவை எதிர்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் எதிர்கட்சியினர் ஆலோசனையில் ஈடுபட்டனர். ராஜ்நாத்சிங், பியூஷ் கோயல், அனுராக் தாகூர், கிரண் ரிஜிஜூ, பிரகலாத் ஜோஷி உள்ளிட்ட அமைச்சர்களுடன் பிரதமர் மோடியும் ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க : டைம்டேபிள் போட்டு 2 மனைவிகளுடன் வாழ்ந்து வரும் கணவன்... வார கடைசியில் மட்டும் லீவாம்...!

இந்நிலையில் மக்களவை இன்று கூடியவுடன், ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வேண்டுமென அவைமுன் சென்று பாஜக எம்பிக்கள் குரலெழுப்பினர். இதனை எதிர்த்து எதிர்கட்சிகளும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், அவை நடவடிக்கைகளை சமாளிக்க முடியாமல் மதியம் 2 மணி வரை அவை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதேபோல் மாநிலங்களவையிலும் ராகுல் விவகாரம் தொடர்பாக ஆளுங்கட்சியும் எதிர்கட்சியினரும் அமளியில் ஈடுபட்டதால், அவை ஒத்திவைக்கப்பட்டது. 

இதனால் மக்களவையும் மாநிலங்களவை, தொடங்கிய இரண்டு நிமிடங்களிலேயே ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.