தேவாலயத்தில் சிலைகள் உடைப்பு...!!!!!காரணம் என்ன??

தேவாலயத்தில் சிலைகள் உடைப்பு...!!!!!காரணம் என்ன??

பஞ்சாப் மாநிலம் டர்ன் தரான் மாவட்டத்தில் உள்ள ஒரு தேவாலயத்தில் நேற்று இரவு பலவந்தமாக நுழைந்த மக்கள் அங்கிருந்த சிலைகளை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. தேவாலய பாதிரியாரின் காரையும் தீ வைத்து எரித்தனர். 

கட்டாய மதமாற்றம்:

சீக்கியர்களின் தற்காலிக  தலைவரான அகல் தக்த் ஜதேதார், கிறிஸ்தவ மிஷனரிகளின் "கட்டாய மதமாற்றங்களுக்கு" எதிராக ஒரு அறிக்கையை வெளியிட்ட மறுநாளில் இந்த சம்பவம் நடந்துள்ளது. 

"கிறிஸ்தவ மிஷனரிகள் என்று அழைக்கப்படுபவர்கள் சீக்கியர்களை மோசடியான நடைமுறைகள் மூலம் வலுக்கட்டாயமாக மதம் மாற்றுகிறார்கள். பஞ்சாபில் சீக்கியர்களும் இந்துக்களும் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள், மதம் மாற்றப்படுகிறார்கள். இது அரசாங்கத்தின் தலைமையின் கீழ் நடக்கிறது. பெயரில் மூடநம்பிக்கை நடவடிக்கைகளுக்கு பதிவு செய்ய சட்டத்தில் வழிகள் உள்ளன. வாக்கு வங்கி அரசியலால் மிஷனரிகளுக்கு எதிராக எந்த அரசாங்கமும் நடவடிக்கை எடுக்கத் தயாராக இல்லை” என்று கியானி ஹர்பிரீத் சிங் நேற்று ஃபேஸ்புக் லைவ் வீடியோ அறிக்கையில் தெரிவித்திருந்தார் .

இந்த அறிக்கையின் எதிரொலியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக பார்க்கப்படுகிறது. மாநிலத்தில் கிறிஸ்தவ மிஷனரிகளின் மதமாற்ற முயற்சிகளுக்கு எதிராக சீக்கிய தலைவர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.

தாக்குதலும் குற்றவாளிகளும்:

நான்கு முகமூடி அணிந்த இளைஞர்கள் தேவாலயத்திற்குள் நுழைந்து, காவலாளியின் தலையில் கைத்துப்பாக்கியைக் காட்டி, தேவாலயத்தை சேதப்படுத்துவதற்கும் வாகனத்திற்கு தீ வைப்பதற்கும் முன் அவரது கைகளைக் கட்டி வைத்ததாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

தேவாலயத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளில், தலை மற்றும் முகத்தை சுற்றி சிவப்பு நிற கவசம் அணிந்த நபர் ஒருவர் சிலையை கோடரியால் பலமுறை தாக்கி, தலையை துண்டித்து, தலையை தரையில் போடுவது சிசிடிவியில் பதிவாகியுள்ளது. ”

அவர்களைக் குறித்த முக்கியமான தடயங்கள் கைப்பற்றப்பட்டு இருப்பதாகவும் , நான்கு பேர் இந்த செயலின் பின்னணியில் இருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அவர்கள் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் கூறியுள்ளனர்.

எதிர்ப்பு போராட்டம்:

இந்த சம்பவத்திற்கு எதிராக  கிறிஸ்தவர்கள் குழு ஒன்று போராட்டம் நடத்தியதுடன், கெம்கரன், பிகிவிண்ட், பட்டி, ஹரிகே மற்றும் ஃபெரோஸ்பூர் செல்லும் அனைத்து வழிகளையும் மறித்து வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

பஞ்சாப் முதலமைச்சர்:

இந்த சம்பவம் துரதிர்ஷ்டவசமானது என்று கூறியுள்ள முதல்வர் பகவந்த் மான், மாநிலத்தில் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்க எவரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று உறுதியளித்துள்ளார்.

"பஞ்சாபின் சகோதரத்துவத்தை உடைக்க யாரையும் அனுமதிக்க மாட்டோம்.. டர்ன் தரன் சம்பவம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது.. அதை விசாரித்து குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.." என்று அவர் பஞ்சாபி மொழியில் ட்வீட் செய்துள்ளார் பஞ்சாப் முதலமைச்சர்.

வழக்கு பதிவு:

பஞ்சாப் ஒரு எல்லை மாநிலமாக இருப்பதால் எளிதாக மதபோதகர்கள் வந்து மதப்பரப்புரை செய்து வருகின்றனர் எனவும் மேலும் இந்த மத பிரச்சாரங்களை நடத்த வெளிநாட்டு நிதி இங்கு வருவதாகவும், "அதை உடனடியாகக் கட்டுப்படுத்த வேண்டும்" என்றும் மத்திய அரசிடம்  கியானி ஹர்பிரீத் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

"போலி போதகர்கள்" சீக்கியர்களை தவறாக வழிநடத்தி அவர்களை மதமாற்றுகிறார்கள் என்று அகல் தக்த் கூறியுள்ளார். "இந்த போலி போதகர்கள் மீது கருப்பு மாந்திரீகம் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும்" என்று சீக்கிய அமைப்பு வலியுறுத்தி வருகிறது.