தமிழகம், பஞ்சாப் உள்ளிட்ட 4 மாநில அதிகாரிகளுடன் மத்திய மின்துறை அமைச்சர் முக்கிய ஆலோசனை

தமிழகம், பஞ்சாப், ஹரியானா மற்றும் குஜராத் உள்ளிட்ட மாநிலங்களின் மின்துறை அதிகாரிகளுடன் மத்திய மின் சக்தி துறை அமைச்சர் இன்று முக்கிய ஆலோசனை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம், பஞ்சாப் உள்ளிட்ட 4 மாநில அதிகாரிகளுடன் மத்திய மின்துறை அமைச்சர் முக்கிய ஆலோசனை

நிலக்கரி பற்றக்குறையால் தமிழகம், டெல்லி உள்பட பல்வேறு மாநிலங்களில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு மின்சார தட்டுப்பாடு ஏற்படக்கூடிய ஆபத்து உருவாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது. மின் உற்பத்திக்கு தேவையான நிலக்கரியை வழங்குமாறு தமிழக அரசு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ள நிலையில் பல்வேறு மாநிலங்களும் நிலக்கரியை வழங்குமாறு கோரிக்கை விடுத்து வருகின்றன.

இந்த நிலையில் தமிழகம், பஞ்சாப், ஹரியானா மற்றும் குஜராத் உள்ளிட்ட மாநிலங்களின் மின் துறை அதிகாரிகளுடன் மத்திய மின் சக்தி துறை அமைச்சர் இன்று காணொலி வாயிலாக முக்கிய ஆலோசனை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில அரசுகளின் பிரதிநிதிகளை தவிர மின் உற்பத்தி நிறுவனங்களின் பிரதிநிதிகளும் ஆலோசனையில் பங்கேற்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த ஆலோசனையின் போது, 7ஆயிரத்து 150 மெகா வாட் கூடுதல் மின் உற்பத்தி செய்யப்படுவது தொடர்பாக ஆலோசிக்க பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. மே மாதத்துக்கான மின்தேவை சராசரியை விட 220 ஜிகா வாட் அதிகமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக உத்திரபிரதேசத்தில் 25 சதவீதமும், மகாராஷ்டிராவில் 16 சதவீதமும், குஜராத்தில் 10 சதவீதமும் மற்றும் தமிழகத்தில் 8 சதவீதமும் மின் தேவை அதிகரிக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.

தற்போது செயல்படாமல் ஆனால் நல்ல நிலையில் உள்ள மின் உற்பத்தி நிலையங்களில் உடனடியாக மின் உற்பத்தியை தொடங்கவும், தனியார்களிடமிருந்து மின்சாரம் வாங்குவது மற்றும் நிலக்கரி இறக்குமதி தொடர்பாகவும் இன்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.