சந்திரபாபு நாயுடு கைது; ஆந்திராவில் பதற்றம்!

சந்திரபாபு நாயுடு கைது; ஆந்திராவில் பதற்றம்!

தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும் ஆந்திர முன்னாள் முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

ஆந்திராவில் சந்திரபாபு முதலமைச்சராக இருந்த போது இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கும் வகையில் மூவாயிரத்து 350 கோடி ரூபாய் மதிப்பில் ஜெர்மனை சேர்ந்த சீமென் என்ற அமைப்புடன் ஒப்பந்தம் கையெழுத்திட்டார்.  இந்த திட்டத்தில் மாநில அரசு பத்து சதவீத பங்கை செலுத்த வேண்டிய நிலையில் மாநில அரசின் பங்குத் தொகையில் 240 கோடி ரூபாய் முறைகேடு செய்யப்பட்டதாக  குற்றச்சாட்டு எழுந்தது.  

இதுத் தொடர்பாக, சந்திர பாபு நாயுடு உள்ளிட்ட  26 பேர் மீது சிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அமலாக்கத்துறையும் இந்த 26 பேருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்நிலையில் நந்தியாலா மாவட்டத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த சந்திரபாபு நாயுடுவை மாநில புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.

கைது குறித்து பேசிய சந்திரபாபு நாயுடு, ஊழல் மற்றும் முறைகேடுகளில் ஈடுபடாத தன்னை   எந்தவிதமான முன்னறிவிப்பும் இல்லாமல் கைது செய்து விட்டதாகவும் உரிய ஆவணங்கள் இல்லாமல் தனது பெயர் எஃப்.ஐ. ஆரில் சேர்க்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டியுள்ளார். சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதால் ஆந்திராவில் பதற்றமான நிலை நிலவுவதால் அசம்பாவிதங்களைத் தடுக்க அரசுப் பேருந்துகளை  போலீசார் ஆங்காங்கே நிறுத்தி வைத்துள்ளனர்.

தமிழகத்திலிருந்து ஆந்திராவிற்கு வரும் பேருந்துகளும் தமிழக எல்லையிலே நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் திருப்பதியில் ஏழுமலையான் கோயிலுக்கு வந்த பக்தர்கள் பேருந்துக்காக காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ரயில் போக்குவரத்து மட்டும் இயக்கப்பட்டு வரக்கூடிய நிலையில் திருப்பதி - திருமலை இடையே மட்டும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இதையும் படிக்க: பூச்சி மருந்தில் கலப்படம்; நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை!