10 லட்சத்திலிருந்து 2 லட்சமாக குறைக்கப்பட்ட இழப்பீட்டு தொகை.....நடவடிக்கை எடுக்குமா மத்திய அரசு?!!

10 லட்சத்திலிருந்து 2 லட்சமாக குறைக்கப்பட்ட இழப்பீட்டு தொகை.....நடவடிக்கை எடுக்குமா மத்திய அரசு?!!

1993-ம் ஆண்டு முதல் சாக்கடைகளை சுத்தம் செய்யும் போது உயிரிழந்த அனைவரின் குடும்பத்துக்கும் ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று 2014ல், உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது.

இழப்பீடு தொகை:

பாதாள சாக்கடை, கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட 104 பேரின் குடும்பங்களுக்கு இதுவரை மத்திய அரசு இழப்பீடு வழங்கவில்லை என நாடாளுமன்ற நிலைக்குழுவின் அறிக்கை தெரிவித்துள்ளது.  இது தொடர்பாக பாஜக எம்பி ரமாதேவி தலைமையிலான சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் நிலைக்குழு தனது அறிக்கையை மக்களவையில் கடந்த டிசம்பர் 16ஆம் தேதி தாக்கல் செய்தது. 

நிலைக்குழு அறிக்கை:

அந்த அறிக்கையில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மத்திய அரசு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.  இனியும் தாமதிக்காமல் 104 குடும்பங்களுக்கு உடனடியாக இழப்பீடு வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இந்த நிலைக்குழு கூறியுள்ளது.

உச்ச நீதிமன்ற உத்தரவு:

1993-ம் ஆண்டு முதல் சாக்கடைகளை சுத்தம் செய்யும் போது உயிரிழந்த அனைவரின் குடும்பத்துக்கும் ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று 2014ல், பாதாள சாக்கடை துப்புரவு பணியாளர்களுக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.  இருப்பினும், 2019 இல் தாக்கல் செய்யப்பட்ட ஆர்டிஐ 1993 மற்றும் 2019 க்கு இடையில், பாதாள சாக்கடை சுத்தம் செய்யும் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு அறிவிக்கப்பட்ட தொகையில் 50% மட்டுமே இழப்பீடு பெற்றது தெரியவந்தது.

குறைக்கப்பட்ட தொகை:

மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், பலியானவர்களின் குடும்பங்களுக்கு, 10 லட்சத்திற்கு பதிலாக, 5 லட்சம், 4 லட்சம் அல்லது 2 லட்சம் ரூபாய் என இழப்பீட்டு தொகை குறைவாகவே வழங்கப்பட்டுள்ளது.  கொள்கை முடிவுகளை அமல்படுத்துவது மத்திய அரசின் பொறுப்பு எனவும் நாடாளுமன்ற நிலைக்குழு கடந்த வாரம் தனது அறிக்கையில் தெரிவித்திருந்தது. இழப்பீடு வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் குறித்தும் குழு அதிருப்தி தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

-நப்பசலையார்

இதையும் படிக்க:  நிறுத்தப்படுகிறதா சீனா பொருள்கள் இறக்குமதி...இந்தியாவின் முடிவு என்ன??!!