காங்கிரஸ் தலைமையற்ற கட்சி...!!!! : பாஜக பொதுச்செயலாளர்

மக்களின் மனநிலையை காங்கிரஸால் புரிந்து கொள்ள முடியவில்லை எனவும் அதனாலேயே அடுத்தடுத்து தேர்தல்களில் தோல்வி அடைந்து வருகின்றன எனவும் பாஜகவின் தேசிய பொது செயலாளர் அருண் சிங் விமர்சித்துள்ளார்.
கர்நாடகா தேர்தல்:
கர்நாடகாவின் அடுத்த சட்டமன்ற தேர்தலில் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை விவசாயிகள், மாணவர்கள், பட்டியல் இன மக்கள், பழங்குடியின மக்கள் நலனுக்காக மிக சிறப்பாக செயலாற்றி வருகிறார் எனவும் தெரிவித்துள்ளார். அதனால் பாஜகவே மீண்டும் ஆட்சி அமைக்கும் எனவும் காங்கிரஸால் எந்த பிரச்சினையும் இல்லை எனவும் கூறியுள்ளார்.
நாடு விடுதலை அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு திட்டமிடப்பட்டுள்ளது என அருண் சிங் கூறியுள்ளார். அதன் ஒரு பகுதியாக ஹர் கர் திரங்கா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரித்துள்ளார்.
பிரதமரின் வேண்டுகோளை ஏற்று, பாஜக ஆகஸ்ட் 9 முதல் 15 வரை பல நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து வருகிறது எனவும் அருண் சிங் கூறியுள்ளார். ஆகஸ்ட் 11 முதல் 13 வரை 'திரங்கா யாத்ரா' நடைபெறும் என்றும், ஆகஸ்ட் 13 முதல் 15 வரை மக்கள் தங்கள் வீடுகளில் தேசியக் கொடி ஏற்றுவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி சிறப்பான முறையில் தேசத்தை வழிநடத்தி வருகிறார் எனவும் எதிர்கட்சிகள் வேண்டுமென்றே பிரச்சினைகளை உருவாக்க வேண்டும் எனவும் அருண் சிங் கூறியுள்ளார். மழைக்கால கூட்டத்தொடரில் தேவையற்ற பிரச்சினைகளை எழுப்பி நாடாளுமன்றத்தை முடக்கும் பணியில் ஈடுபட்டன எதிர்கட்சிகள் என குற்றஞ்சாட்டியுள்ளார் அருண் சிங்.
காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி மீதான குற்றங்களை மறைக்கவே பாஜக மீது பழிசுமத்தி மக்களை திசை திருப்பும் பணியை செய்து வருகின்றன எனவும் கூறியுள்ளார்.
ஆளும் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது எனவும் நாடாளுமன்றம் சிறப்பாக செயல்படுவதையும் உறுதிபடுத்த விரும்புகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார். மக்கள் செலுத்தும் வரிப்பணம் வீணாகாமல் நாட்டின் நலனுக்காக எதிர்கட்சிகள் நாடாளுமன்றத்தி கடைசி வாரத்திலாவது பங்கேற்க வேண்டும் என விரும்புவதாகவும் அருண் சிங் தெரிவித்துள்ளார்.
தலைமையற்ற கட்சி:
காங்கிரஸ் ஒரு தலைமையற்ற கட்சி எனவும் யாரும் ராகுல் காந்தியால் ஈர்க்கப்படவில்லை எனவும் அருண் சிங் தெரிவித்துள்ளார். மேலும், ராகுல் மீது யாருக்கும் நம்பிக்கை இல்லை எனவும் அதனால் பலர் காங்கிரஸை விட்டு வெளியேறுகின்றனர் என்றும் பேசியுள்ளார்.
2024 பொது தேர்தலிலும் பாஜக கூட்டணியே நிச்சயம் வெற்றிபெறும் எனவும் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார் பாஜகவின் தேசிய பொது செயலாளர் அருண் சிங்.