தலைநகரை முடக்கிய காங்கிரஸ்...!

பணவீக்கம், வேலையில்லா திண்டாட்டத்தை கண்டித்து, டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தலைநகரை முடக்கிய காங்கிரஸ்...!

விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து நாடாளுமன்ற கூட்டத்தில் விவாதிக்கக் கோரி, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. இதனால் 20க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இந்நிலையில், விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், அமலாக்கத்துறையை மத்திய அரசு கையாளும் முறை உள்ளிட்ட பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டு, நாடு தழுவிய அளவில் காங்கிரஸ் கட்சியினர் இன்று போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்கு வருகை தந்த ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட தலைவர்கள், மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கருப்பு நிற ஆடைகளை அணிந்திருந்தனர். அப்போது மத்திய அரசுக்கு எதிராக அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

இதனைத் தொடர்ந்து, மத்திய அரசுக்கு எதிரான பதாகைகளை கைகளில் ஏந்தியபடி, ராகுல் காந்தி தலைமையில், காங்கிரஸ் கட்சியினர் நாடளுமன்ற வளாகத்தில் இருந்து குடியரசுத் தலைவர் மாளிகை நோக்கி நடை பயணம் மேற்கொண்டனர். அப்போது, அவர்களை தடுத்து நிறுத்திய காவல்துறையினர், ராகுல் காந்தியை கைது செய்தனர்.

 ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் எம்.பி.க்கள் லைன்ஸ் கிங்ஸ்வே காவல் முகாமில்  வைக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல், காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட பிரியங்கா காந்தியை காவல்துறையினர் கைது செய்தனர். அப்போது அவர் சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நாடாளுமன்ற வளாகம் முன்பு, காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமையில், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பிரதமர் அலுவலகம், குடியரசுத் தலைவர் மாளிகை உள்ளிட்ட இடங்களை முற்றுகையிட முயன்ற காங்கிரஸ் கட்சியினர், ஆங்காங்கே தடுத்து நிறுத்தப்பட்டனர். காங்கிரஸ் கட்சி போராட்ட அறிவிப்பை வெளியிட்ட உடன், டெல்லியின் பல்வேறு இடங்களில் 144 தடை விதிக்கப்பட்டு. ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதேபோல், மத்திய அரசின் அணுகுமுறையை கண்டித்து, நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

கைதுக்கு பிறகு பிரியங்கா காந்தி:

பாஜக எதிர்க்கட்சிகளை வாயடைக்க வைத்துவிடலாம் என்று நினைக்கிறார்கள் என்றும் ஆளும் அரசின் அமைச்சர்களால் பணவீக்கத்தைப் பார்க்க முடியாததால், பிரதமர் வீடு நோக்கி பேரணியாகச் சென்று பணவீக்கத்தைக் காட்ட முயன்றதாகவும் பிரியங்கா காந்தி கூறியுள்ளார். மேலும் அவர் நாட்டின் சொத்துக்களை பிரதமர் மோடி அவருடைய நண்பர்களிடம் ஒப்படைத்து விட்டார் எனவும் பேசியுள்ளார்.