காங்., தலைமைப்பன்புக்கு தகுதி இல்லாத கட்சி – சி.பி.ஐ. அறிக்கை

காங்., தலைமைப்பன்புக்கு தகுதி இல்லாத கட்சி – சி.பி.ஐ. அறிக்கை

தேர்தல்களில் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க காங்கிரஸ் கட்சி தவறிவிட்டதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி விமர்சித்துள்ளது.  

இடதுசாரிகள் வரைவு தீர்மானம்:

வரும் அக்டோபரில் விஜயவாடாவில் நடைபெறவுள்ள சிபிஐயின் முப்பெரும் கட்சி மாநாட்டிற்காக வெளியிடப்பட்ட வரைவு அரசியல் தீர்மானத்தில் காங்கிரஸுக்கு எதிராக கடுமையான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

காங்கிரஸ் கட்சியை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி விமர்சித்திருந்தாலும், மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்து பாஜகவை எதிர்கொள்ள வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளது.

தேசிய அளவில் பாஜக எதிர்கொள்வதற்கு "அர்த்தமுள்ள, நம்பகமான மற்றும் கருத்தியல் ரீதியாக உறுதியான முன்னணியை உருவாக்க எதிர்க்கட்சிகள் தவறிவிட்டதாகவும் இடதுசாரிகள் விமர்சித்துள்ளன.  

காங்., சுயபரிசோதனை செய்ய வேண்டும்:


பாஜகவுக்கு எதிராக தேர்தல் வெற்றியைப் பெற காங்கிரஸ் என்ன செய்யப்போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும் எனவும், அந்த கட்சி சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டியது அவசியம் எனவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா கூறியுள்ளார். காங்கிரஸின் சித்தாந்த மற்றும் பொருளாதார நிலைகளை மதிப்பிட்டு பார்க்க வேண்டும். காங்கிரஸால் புதிய தாராளமயக் கொள்கையில் ஒட்ட முடியாது. அது நேரு மாதிரிக்குத் திரும்ப வேண்டும் என்று எனவும் கேட்டுக்கொண்டார்.  

பலமிழந்துவிட்டதா காங்கிரஸ்? விமர்சித்த சிபிஐ:

உள்கட்சி பூசல்கள், கட்சிப்பிரிவுகள், அதன் தலைமை மற்றும் கட்சித் தொண்டர்களிடையே கருத்தியல் ஒற்றுமையின்மை ஆகியவற்றால் காங்கிரஸ் கட்சி பலமிழந்து இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.  
தேசிய அளவில், தேர்தல் போட்டியில் பாஜகவை எதிர்கொள்ள காங்கிரஸால் திடமான எதிர்க்கட்சி ஒற்றுமையை உருவாக்க முடியவில்லை எனவும், காங்கிரஸ் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கவும் உற்சாகப்படுத்தவும் தவறிவிட்டதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கையில் சுட்டிக்கட்டப்பட்டுள்ளது.  

இந்துத்துவம் மற்றும் இந்துதுவா:


அத்துடன் மட்டுமின்றி, இந்தித்துவம் தொடர்பான காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் கருத்தையும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது. அதாவது, நரசிம்ம ராவ் பிரதமராக இருந்தபோது பாபர் மசூதி இடிப்புக்குப் பிறகு காங்கிரஸின் மதச்சார்பற்ற நிலை கேள்விக்குறியாகியுள்ளதாக குற்றம்சாட்டிய சி.பி.ஐ. மதச்சார்பின்மையில் காங்கிரஸின் நிலைப்பாடு மிகவும் தெளிவாக இல்லை எனவும் கருத்து கூறியுள்ளது.   ஏனெனில் அதன் தலைமை இன்னும் மதச்சார்பின்மையின் அரசியலமைப்பு அடிப்படையில் ஒட்டிக்கொள்வதற்குப் பதிலாக இந்துத்துவம் மற்றும் இந்துத்துவா என்ற விவாதத்தில் ஈடுபட்டுள்ளதாக அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்வைத்துள்ளது.