டெல்டா பிளஸ் கொரோனா  மாறுபாட்டுக்கு முதல் பலி... 3 ஆம் அலைக்கு வழிவகுக்கும் டெல்டா பிளஸ்...

இந்தியாவில் டெல்டா பிளஸ் மாறுப்பாட்டால் முதல் உயிரிழப்பு நிகழ்ந்துள்ளதை மரபணு மாறுபாட்டுக்கான ஆய்வு அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது.

டெல்டா பிளஸ் கொரோனா  மாறுபாட்டுக்கு முதல் பலி... 3 ஆம் அலைக்கு வழிவகுக்கும் டெல்டா பிளஸ்...
இந்தியாவில் கொரோனா 2 ஆம் அலை மாபெரும் பேரழிவை ஏற்படுத்தியது நாம் அனைவருக்கு தெரிந்ததே. இதற்கு அதீத பரவல் தன்மை மற்றும் தொற்று வீரியம் கொண்ட டெல்டா மாறுபாடே காரணம் என உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. மேலும் இதனை கவலைக்குரிய தொற்று எனவும் வகைப்படுத்தியுள்ளது. இந்தநிலையில் டெல்டா மாறுபாடானது தற்போது மீண்டும் பிறழ்வடைந்து டெல்டா பிளஸ் என உருமாற்றம் பெற்றுள்ளது.
 
இது டெல்டா மாறுபாட்டை காட்டிலும் அதீத பரவல் தன்மை மற்றும் தொற்று வீரியம் கொண்டது என நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும் இதுவே 3 ஆம் அலைக்கு காரணமாக அமையப்போவதாக எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். டெல்டா பிளஸ் வைரஸ் தமிழகம், மத்திய பிரதேசம், மகராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட 4 மாநிலங்களில் பரவி இருப்பதாகவும், இதனால் 40 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்திருந்தது. 
 
இந்த நிலையில் மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைனி பகுதியில் டெல்டா பிளஸ் மாறுப்பாட்டால் முதல் உயிரிழப்பு நிகழ்ந்துள்ளதை மரபணு மாறுபாட்டுக்கான ஆய்வு அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் மரணமடைந்ததை அடுத்து அவரது உடலில் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தியதில் அவருக்கு டெல்டா பிளஸ் பாதித்திருந்தது தெரியவந்துள்ளது.
 
மத்திய பிரதேசத்தில் 4 ஆண்கள், ஒரு பெண் என மொத்த 5 பேர் டெல்டா பிளஸ் மாறுப்பாட்டால் தாக்கப்பட்டிருந்த நிலையில் ஆண்கள் 4 பேரும் தொற்று பாதிப்பில் இருந்து மீண்டுவிட்டதாகவும், பெண் ஒருவர் மட்டும் உயிரிழந்திருப்பதாகவும் மரபணு மாறுபாட்டுக்கான ஆய்வு அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது.