காவிரி நீர் பங்கீடு...! கோரிக்கை விடுத்த விவசாய சங்கங்கங்களின் கூட்டமைப்பு ...!

காவிரி நீர் பங்கீடு...! கோரிக்கை விடுத்த விவசாய சங்கங்கங்களின் கூட்டமைப்பு ...!

காவிரி நீர் பங்கீடு குறித்து தமிழ்நாடு விவசாய சங்கங்கங்களின் கூட்டமைப்பு பல கோரிக்கைகளை முன்வைத்துள்ளது.

தமிழ்நாடு விவசாய சங்க கூட்டமைப்பின் தலைவர் செ.நல்லசாமி  காரைக்காலில் செய்தியாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது
தமிழ்நாடு வாழை உற்பத்தியாளர் கூடமைப்பின் தலைவர் ஜி.ஆதித்தன், தமிழ்நாடு கள் இயக்க அமைப்பாளர் சுந்தர்சாமி, தமிழக காவிரி டெல்டா விவசாயிகள் நலச்சங்கத் தலைவர்  ராஜாராம்,ஆகியோர் உடனிருந்தனர். அப்போது பேசிய தமிழ்நாடு விவசாய சங்க கூட்டமைப்பின் தலைவர் செ.நல்லசாமி,   மாதாந்திர அடிப்படையிலான நீர் பங்கீடு என்ற அம்சம் காவிரி நீர் பங்கீடு தொடர்பான தீர்ப்பில் இடம்பெற்றிருக்கும் வரை, தமிழ்நாடும், புதுச்சேரியும் கர்நாடகாவின் வடிகாலாகத்தான் இருக்கவேண்டியிருக்கும். காவிரியில் வரக்கூடிய நீரை தீர்ப்பின் விகிதாச்சாரப்படி நாள்தோறும் பங்கிட்டு அந்தந்த மாநிலங்களுக்கு வழங்க வேண்டும். இது குறித்து தமிழ்நாடு, புதுச்சேரி அரசுகள் உச்சநீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என கூறினார். 

மேலும், தமிழகத்தில் 33 ஆண்டுகளுக்கும் மேலாக கள்ளுக்கான தடை உள்ளது. தமிழக அரசு இந்த தடையை நீக்கி அறிவிக்க வேண்டும். அவ்வாறு அறிவித்தால் தமிழக அரசு முதன்மை மாநிலமாக மாறும் என பேசிய அவர், பனை, தென்னை, ஈச்ச மரங்களிலிருந்து பதனீர், கள் போன்றவற்றை இறக்கி மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களாக்கி விற்பனை செய்யலாம். கள்ளுக்கான தடையை நீக்க வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் அடுத்த ஆண்டு ஜனவரி 21-ம் தேதி முதல்  கள் இறக்கி சந்தைப்படுத்தும் போராட்டம் நடத்தப்படும் என பேசினார். 

தொடர்ந்து பேசிய அவர் புதுச்சேரி அரசு, காரைக்கால் மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். மத்திய அரசு வழங்கும் பத்ம விருதுகளில் 50 சதவீதம், விவசாய துறைகளில் சாதனை புரிந்தோருக்கு வழங்க வேண்டும் என்றும் தற்போது 128 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்ட நிலையில், அதில் விவசாய துறையை சேர்ந்தவர் ஒருவர் மட்டுமே இடம் பெற்றுள்ளார் என கூறினார். 

இதையும் படிக்க : வேகமாக இருசக்கர வாகனம் இயக்குவோருக்கான நடவடிக்கை....! தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம்...!