
தடுப்பூசி செலுத்திக் கொள்வது கட்டாயம் என பல மாநில அரசுகளின் உத்தரவுக்கு எதிராகவும் இதனை, அரசியல் சாசனத்திற்கு எதிரானது எனக் அறிவிக்கக் கோரியும் உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் பிரசாந்த் கிஷோர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இவ்வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் எந்த ஒரு தனி நபரையும் தடுப்பூசியை கட்டாயம் செலுத்திக் கொள்ள வேண்டும் என கூற முடியாது எனவும், அதேநேரத்தில் பொது சுகாதாரத்தை காரணம்காட்டி சில நிபந்தனைகளை உருவாக்கி அதற்கான கொள்கைகளை உருவாக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது எனவும் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களின் மீதான கட்டுப்பாடுகளை மீண்டும் ஒருமுறை ஆராய வேண்டும் எனவும் மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
இதனிடையே தடுப்பூசி பயன்பாட்டால் ஏற்பட்ட பாதிப்பு விவரங்களை வெளியிட வேண்டும் என்று தேசிய தடுப்பூசி ஆலோசனை குழுவின் முன்னாள் உறுப்பினர் தொடர்ந்த வழக்கிலும் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
அந்த தீர்ப்பில், 'தடுப்பூசி பயன்பாட்டால் ஏற்பட்ட பாதிப்பு குறித்த விவரங்களை வெளியிட வேண்டும் என்றும் தனி மனித உரிமை பாதிக்காதவாறு ஆய்வு முடிவுகளை வெளியிட வேண்டும் 'என்றும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.