எல்லைகளில் அத்துமீறுவது ஜனநாயக விரோதமானது... இந்தோ-பசிபிக் பிராந்திய மாநாட்டில் ராஜ்நாத் சிங் பேச்சு...

கடல் பகுதியில் சட்டப்பூர்வமான உரிமைகளை பாதுகாக்க இந்தியா உறுதி கொண்டுள்ளதாக, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

எல்லைகளில் அத்துமீறுவது ஜனநாயக விரோதமானது... இந்தோ-பசிபிக் பிராந்திய மாநாட்டில் ராஜ்நாத் சிங் பேச்சு...

இந்தோ-பசிபிக் பிராந்திய மாநாட்டில் காணொலி காட்சி வாயிலாக பேசிய அவர், பன்முகத்தன்மை வாய்ந்ததாக பல கலாச்சாரங்கள், இனங்கள், பொருளாதார மாதிரிகள், நிர்வாக அமைப்புகள் கொண்டவையாக இந்தோ-பசிபிக் பிராந்தியம் விளங்கினாலும், பெருங்கடல்கள் ஒரு பொதுவான இணைப்பாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

கடல்சார் பிரச்சினைகளில் ஒருங்கிணைந்த செயல்பாடுகள் மற்றும் பொதுவான நோக்கங்களை கண்டறிய வேண்டிய அவசியம் உள்ளதாக சுட்டிக் காட்டியுள்ள ராஜ்நாத் சிங், பல சவால்களை இந்தோ-பசிபிக் பிராந்தியம் எதிர்கொண்டு வருவதாகவும், இவற்றை சமாளிக்க ஒற்றுமை தேவை எனவும் தெரிவித்துள்ளார்.

தம் கடற்பகுதிக்குள் உள்ள சட்டப்பூர்வமான உரிமைகளை பாதுகாக்க இந்தியா உறுதி கொண்டுள்ளது என்றும், அதே சமயம் அனைத்து நாடுகளின் உரிமைகளை மதிப்பதில் இந்தியா உறுதியாக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள அவர், சில நாடுகள் எல்லைகளை விரிவுப்படுத்தும் நோக்கில் செயல்படுவது அமைதிக்கு எதிரானது என்றும், எல்லைகளை பாதுகாக்க அனைத்து நாடுகளுக்கும் உரிமையுள்ளதாகவும் கூறியுள்ளார்.

அடுத்த நாடுகளின் எல்லைகளில் அத்துமீறுவது ஜனநாயக விரோதமானது என தெரிவித்துள்ள ராஜ்நாத் சிங், இந்தியாவில் தோன்றிய புத்த மதம், இலங்கைக்கு சென்று, அங்கிருந்து, கொரியா வரை உள்ள கிழக்காசிய நாடுகளில் பரவியுள்ளது என்றும், இதற்கு கடல் வழி இணைப்பு தான் பெரிதும் காரணம் எனவும் குறிப்பிட்டார்.