எரிசக்தி, நிலக்கரித் துறை அமைச்சர்கள் அமித்ஷாவுடன் சந்திப்பு

நிலக்கரி தட்டுப்பாடு பிரச்னை தொடர்பாக, மத்திய அமைச்சர்களை கூட்டி, உள்துறை அமைச்சர் அமித்ஷா அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.

எரிசக்தி, நிலக்கரித் துறை அமைச்சர்கள் அமித்ஷாவுடன் சந்திப்பு

லெபனான், சீனா போன்ற நாடுகளை போல் இந்தியாவிலும் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. குறிப்பாக தொடர் மழை காரணமாக சுரங்கங்களில் நிலக்கரி வெட்டி எடுக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டதாக கூறப்பட்டது. மேலும் மின்சாரம் பயன்பாடு அதிகரிப்பு, விலை உயர்வு ஆகியனவும் நிலக்கரி தட்டுப்பாடுக்கு காரணம் என கூறப்பட்டது. இதனிடையே நிலக்கரி இருப்பு குறைந்ததாக தகவல் வெளியிட்ட மின்விநியோக நிறுவனங்கள், டெல்லியில் மின்தடை ஏற்படும் எனவும் குறுஞ்செய்தி வாயிலாக மக்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்த சூழலில், நிலக்கரி தட்டுப்பாடு பிரச்னை இருப்பதை குறிப்பிட்டும், கூடுதலாக நிலக்கரி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தியும் டெல்லி, ராஜஸ்தான், பஞ்சாப், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்கள் மத்திய அரசுக்கு கடிதம் எழுதின.  தேவைக்கு அதிகமாக நிலக்கரியை இருப்பு வைத்துக்கொள்ள மத்திய அரசு தவறிவிட்டதாகவும் காங்கிரஸ் குற்றஞ்சாட்டியிருந்தது. இந்தநிலையில் நேற்று மின்விநியோக நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்திய மத்திய மின்சாரத்துறை அமைச்சர் ஆர்.கே. சிங், மின்பற்றாக்குறை என்ற பேச்சுக்கே இடமில்லை என கூறினார். மேலும் நிலக்கரி தட்டுப்பாடு இருப்பதாக  பொய் தகவல் பரப்பப்படுகிறது எனவும் குற்றஞ்சாட்டினார். மாநிலங்களுக்கு தேவையான நிலக்கரி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறியிருந்தார்.

இந்தநிலையில் இன்று, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிலக்கரி தட்டுப்பாடு குறித்து விவாதிக்க சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்களுக்கு அவசர அழைப்பு விடுத்துள்ளார். டெல்லியில் உள்ள மத்திய உள்துறை அமைச்சக அலுவலகத்தில் நடைபெற்று வரும் இந்த கூட்டத்தில், மின்சாரத்துறை அமைச்சர் ஆர்.கே.சிங், நிலக்கரி துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் மின்விநியோக நிறுவனங்களும் பங்கேற்றுள்ளனர். கூட்டத்தில் தடையின்றி நிலக்கரி கிடைக்க வழிவகை செய்வது, மின்உற்பத்தியை பெறுக்குவதற்கான மாற்று வழிகள் குறித்து ஆலோசிக்கப்படலாம் என கூறப்படுகிறது.