
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் வீடு புகுந்து பிரபல டிவி நடிகையை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பட்காம் மாவட்டத்தின் ஹிஷோரா பகுதியை சேர்ந்தவர் அம்பிரீன் பட். பிரபல டிவி நாடக நடிகையான இவரது வீட்டிற்குள் நுழைந்த தீவிரவாதிகள், திடீரென அம்பிரீன் மீதும், அவருடன் இருந்த 10 வயது சிறுமி மீதும் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச்சென்றனர்.
இதில் படுகாயம் அடைந்த இருவரையும் அக்கம்பக்கத்தினர், மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் அம்பிரீன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
காயமடைந்த 10 வயது குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து, அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டு தப்பியோடிய தீவிரவாதிகளை தேடிவருகின்றனர்.