வேளாண் சட்டங்கள் வாபஸாகும் வரை டெல்லியில் போராட்டத்தை தொடர விவசாயிகள் முடிவு...

போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு இழப்பீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிரதமருக்கு கடிதம் எழுதவுள்ளதாக விவசாய சங்க தலைவர் பால்பீர் சிங் தெரிவித்துள்ளார். 

வேளாண் சட்டங்கள் வாபஸாகும் வரை  டெல்லியில் போராட்டத்தை தொடர விவசாயிகள் முடிவு...

வேளாண் துறையை சீர்திருத்தும் நோக்கில் மத்திய அரசு கடந்த ஆண்டு 3 திருத்த சட்டங்களை கொண்டு வந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து  பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் கடந்த ஓராண்டுக்கு மேலாக போராடி வருகின்றனர். இந்த விவகாரத்தில் அரசுக்கும், விவசாயிகளுக்கும் இடையே தொடர்ந்து மோதல் நீடித்து வந்த நிலையில், சர்ச்சைக்குரிய 3 சட்டங்களையும் திரும்பப்பெற உள்ளதாக பிரதமர் மோடி அண்மையில் திடீரென அறிவித்தார்.

மத்திய அரசின் இந்த முடிவை விவசாய அமைப்புகள் வரவேற்ற அதேநேரத்தில்  3 சட்டங்களையும் நாடாளுமன்றம் மூலம் முறைப்படி திரும்பப்பெறும் வரை தாங்கள் போராட்டத்தை தொடரப்போவதாகவும் அறிவித்தனர்.இந்த நிலையில் , சிங்கு எல்லையில் சம்யுக்தா கிசான் மோர்ச்சாவின் முக்கிய ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. அதன் முடிவில் திட்டமிட்டபடி போராட்டத்தை வருகிற நாட்களில் தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது.  

அந்தவகையில்  டெல்லி போராட்டத்தின் ஓராண்டு நினைவாக நாடு முழுவதும் 26-ந்தேதி  போராட்டம் நடத்தப்படுகிறது. மேலும்  குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கும் 29-ந்தேதி நாடாளுமன்றம் நோக்கி டிராக்டர் பேரணி போன்றவற்றை நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது அரசின் அடுத்தக்கட்ட நடவடிக்கையை பொறுத்து போராட்டத்தை தீவிரப்படுத்துவதா என்பது குறித்து வருகிற 27-ம் தேதி மீண்டும் கூடி ஆலோசிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்வதற்கான கமிட்டி அமைப்பது, லக்கிம்பூர் கேரி கலவரத்திற்கு ஆளான அமைச்சர் அஜய் மிஸ்ராவை  அமைச்சரவையிலிருந்து நீக்குவது, உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிரதமருக்கு கடிதம் எழுதவுள்ளதாகவும் விவசாய சங்க தலைவர் பால்பீர் சிங் தெரிவித்துள்ளார்.