டெல்லியில் முதல் குரங்கம்மை பாதிப்பு : ' மக்கள் யாரும் பதற்றம் அடைய வேண்டாம் ' - முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லியில் முதல் குரங்கம்மை பாதிப்பு உறுதியாகி உள்ள நிலையில், மக்கள் யாரும் பதற்றம் அடைய வேண்டாம் என்றும், நிலைமை கட்டுக்குள் உள்ளது என்றும் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் முதல் குரங்கம்மை பாதிப்பு : ' மக்கள் யாரும் பதற்றம் அடைய வேண்டாம் ' - முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்

குரங்கம்மை :  

குரங்கம்மை, விலங்குகளிலிருந்து மனிதனுக்கு பரவும் ஒரு வகை வைரஸ் தொற்று ஆகும். இது முதன் முதலில் காங்கோ நாட்டில் 1970 ம் ஆண்டு கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் தொற்று உண்டாவது மிக அரிதான ஒன்று. இதனால் பாதிக்கப்படுபவர்கள் சில வாரங்களிலேயே குணமடைந்து வீடு திரும்பி விடுவார்கள் என பிரிட்டனின் தேசிய சுகாதார சேவை ஒரு தகவல் கூறி இருக்கிறது. 

குரங்கம்மை பாதிப்பு : 

இந்தியாவின் முதல் குரங்கம்மை பாதிப்பு கேரளாவில் உள்ள ஒருவருக்கு கடந்த ஜுலை 15 ம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது.இந்த தொற்று பாதிக்கப்பட்டவர், ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளா திரும்பியுள்ளார்.  அதனை தொடர்ந்து, கேரளாவில் மேலும், 2 பேர் குரங்கம்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இந்தியாவில் குரங்கம்மை பாதிப்பு எண்ணிக்கை :

முன்னதாக கேரளாவில் 3 பேர் குரங்கம்மையால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது டெல்லியில் ஒருவர் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே இந்தியாவில் குரங்கம்மை பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது. 

முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் :

இந்நிலையில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இதுகுறித்து, " டெல்லியில் குரங்கு அம்மையின் முதல் பாதிப்பு கண்டறியப்பட்டது. பாதிக்கப்பட்டவர் நிலையாக இருக்கிறார், குணமடைந்து வருகிறார். அதனால் மக்கள் பீதி அடையத் தேவையில்லை. நிலைமை கட்டுக்குள் உள்ளது. எல்என்ஜேபியில் (LNJP) தனிமைப்படுத்தப்பட்ட வார்டை உருவாக்கியுள்ளோம். நோய் பரவலைத் தடுக்கவும், டெல்லி மக்களை பாதுகாக்கவும், எங்கள் சிறந்த குழு உள்ளது." என கூறியுள்ளார்.