ஒரே பள்ளியில் 107 பேருக்கு கொரோனா... பீதியில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்...

கர்நாடகாவில் ஒரே பள்ளியில் மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் என 107 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், அந்த பள்ளி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

ஒரே பள்ளியில் 107 பேருக்கு கொரோனா... பீதியில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்...

கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு மாவட்டம் பாலேஒன்னூர் பகுதியில் மத்திய அரசின் நவோதயா உண்டு உறைவிட பள்ளி உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் இந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் மாணவ-மாணவியர் என 69 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து மற்ற ஆசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவியருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் மேலும் 38 மாணவ-மாணவிகளுக்கு தொற்று இருப்பது உறுதியானது. இதனால் அந்த பள்ளியில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 107 ஆக உயர்ந்துள்ளது. இதனால் அந்த பள்ளி முழுவதும் கிருமிநாசினி தெளித்து கட்டிடத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் சமீப காலமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. இதனால் மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் கொரோனா பீதி ஏற்பட்டுள்ளது. எனவே கர்நாடகத்தில் மீண்டும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்படுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பள்ளி கல்வித்துறை அமைச்சர் பி.சி.நாகேஸ், கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்தால் பள்ளி-கல்லூரிகள் மூடப்படும் என அறிவித்துள்ளார்.