சபாநாயகர் மீது காகிதங்களை கிழித்து வீசியெறிந்து ஆவேசம்...இரு அவைகளும் ஒத்திவைப்பு!

சபாநாயகர் மீது காகிதங்களை கிழித்து வீசியெறிந்து ஆவேசம்...இரு அவைகளும் ஒத்திவைப்பு!

ராகுல்காந்தி விவகாரம் தொடர்பாக எதிர்கட்சிகளின் கடும் அமளியால் நாடாளுமன்றம் இன்றும் முடங்கியது. மக்களவையில் சபாநாயகரை பேச விடாமல், காகிதங்களை கிழித்து அவர் முகத்தில் எதிர்கட்சியினர் வீசியெறிந்ததால், ஒரு சில நொடிகளிலேயே அவை ஒத்திவைக்கப்பட்டது.


அனைத்து திருடர்களின் பெயரும் மோடி என்றே முடிகிறது என 2019ம் ஆண்டு ராகுல்காந்தி பேசியதை சாடி, அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து அவரது எம்பி பதவி, தகுதிநீக்கம் செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியிட்ட மக்களவை செயலகம், வரும் 22ம் தேதிக்குள் அரசுக்குடியிருப்பை காலி செய்யுமாறு அவருக்கு நோட்டீசும் அனுப்பியது. இந்நிலையில், நாடாளுமன்றத்தில் இன்று எழுப்பப்பட வேண்டிய பிரச்னைகள் தொடர்பாக, மாநிலங்களவை எதிர்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் 2ம் நாளாக கருப்பு உடையணிந்து எதிர்கட்சித் தலைவர்கள் ஆலோசனை நடத்தினர்.

இதையும் படிக்க : அதிமுக பொதுக்குழு வழக்கு: ஈபிஎஸ்க்கு ஆதரவாக அமைந்த தீர்ப்பு... ஓபிஎஸ்ஸின் அடுத்தக்கட்ட மூவ் என்ன?

தொடர்ந்து மக்களவை கூடியதும், ராகுல்காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக கருப்புக் கொடிகளுடன் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு, எதிர்கட்சியினர் முழக்கம் எழுப்பினர். ஒரு கட்டத்தில் காகிதங்களை கிழித்து சபாநாயகரை பேச விடாமல், அவர் முகத்தில் வீசியெறிந்ததால் அவை கூடிய ஒரு சில நிமிடங்களிலேயே 2 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

தொடர்ந்து 2 மணிக்கு மக்களவை கூடிய நிலையில், அவைத்தலைவரை பதாகைகளை வைத்து மறைத்தும் கோஷங்கள் எழுப்பியும் எதிர்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். இதனால் நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது.

மாநிலங்களவையிலும் அவை முன் சென்று ராகுல்காந்திக்கு ஆதரவாக எதிர்கட்சி எம்பிக்கள் கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து அமளி நீடித்ததால், மாநிலங்களவையும் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும்  2 மணியின் போதும் அமளி தொடர்ந்ததால் மாநிலங்களவையும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.