ஒருபக்கம் கனமழை..ஒரு பக்கம் நிலநடுக்கம்..பெங்களூர் மக்கள் பீதி  

பெங்களூருவில் நேற்று காலை முதல் நள்ளிரவு வரை கனமழை கொட்டித்தீர்த்ததால், பெங்களூரு விமான நிலையம் வெள்ளக்காடாக காட்சியளித்தது.
ஒருபக்கம் கனமழை..ஒரு பக்கம் நிலநடுக்கம்..பெங்களூர் மக்கள் பீதி   
Published on
Updated on
2 min read

பெங்களூருவில் கடந்த ஒரு வார காலமாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், நேற்று காலை பெய்யத் தொடங்கிய கனமழையானது, நள்ளிரவை தாண்டியும் இடைவிடாமல் கொட்டித் தீர்த்தது. இதனால் நகரில் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்கள் பெரும் இன்னலை சந்தித்து வருகின்றனர்.

குறிப்பாக பெங்களூரு சர்வதேச விமான நிலையம் முழுவதும் வெள்ளம் சூழ்ந்த நிலையில், பயணிகளை அழைத்துச் செல்லும் 4 சக்கர வாகனங்கள் விமான நிலையத்தின் உள்ளே நுழைய முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். இதனையடுத்து, அருகிலுள்ள கிராம மக்கள் தங்களது டிராக்டர்களை எடுத்து வந்து பயணிகளை விமான நிலையத்திற்குள் அழைத்துச் செல்லவும், வெளியே அழைத்துச் செல்லவும் உதவி செய்தனர். இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

அதேபோல், நகரின் பல்வேறு பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளம் சூழ்ந்ததால் நூற்றுக்கணக்கான இருசக்கர வாகனங்கள் மற்றும் 4 சக்கர வாகனங்கள் தண்ணீரில் மிதந்தன. மேலும் சில நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் பொதுமக்கள் மேலும் அச்சமடைந்துள்ளனர்.

இதனிடையே கர்நாடக மாநிலம் கலபுர்கி மாவட்டத்தில், நேற்று இரவு 9.54 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4 புள்ளி 1 ஆக பதிவாகியுள்ளது. கர்நாடகாவில் கடந்த 11 நாட்களில், 4ஆவது முறையாக நிலநடுக்கம் பதிவானதால் பீதியடைந்த மக்கள், வீடுகளை விட்டு தெருக்களில் தஞ்சம் அடைந்தனர்.

தெலுங்கானா மாநிலத்தில் பலமான நிலநடுக்கம் பதிவான காரணத்தினால், அண்டை மாநில எல்லை மாவட்டமான கலபுர்கியில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து மாவட்ட நிர்வாகம் தரப்பில் தண்டோரா மூலம், பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com