ஹிஜாப்... ஆடை என்பது மானம், எந்த ஆடை என்பது உரிமை.. இரண்டையும் பறிக்க வேண்டாம் - வைரமுத்து

இஸ்லாம் என்பது இந்தியாவில் தான் சிறுபான்மை ஒடுக்க வேண்டாம் என கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

ஹிஜாப்... ஆடை என்பது மானம், எந்த ஆடை என்பது உரிமை.. இரண்டையும் பறிக்க வேண்டாம் - வைரமுத்து

கர்நாடக, உடுப்பியில் உள்ள குந்தாப்பூர் அரசு பியு கல்லூரியில், ஹிஜாப் அணிந்து வந்த 6 மாணவிகளை வகுப்பறைக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. இதை தொடர்ந்து ஹிஜாப் அணிவது எங்கள் உரிமை, எங்களை கல்லூரிக்குள் அனுமதிக்க வேண்டும் என அந்த 6 மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த டிசம்பர் மாதம் உடுப்பியில் தொடங்கிய இந்த பிரச்சனை அதன் சுற்றியுள்ள பல பகுதிகளில் பரவியது. சிக்மகளூர், விஜயபுரா, ஷிமோகா, பத்ராவதி ஆகிய பகுதிகளில் உள்ள கல்லூரிகளிலும் ஹிஜாப் அணிவது தடை செய்யப்பட்டது. மாணவிகள் ஹிஜாப் அணிவதை எதிர்த்து இந்து மாணவ - மாணவியர்கள் காவி துண்டு அணிந்து கல்லூரிக்கு வர தொடங்கினர்.

இஸ்லாமிய மாணவி ஒருவர் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வந்ததை பார்த்து அதற்கு எதிர்ப்பு தெரிவித்து காவி துண்டு அணிந்து இருந்த இந்துத்துவ மாணவர்கள் சில அவரை முற்றுகையிட்டு "ஜெய் ஸ்ரீராம்" என முழக்கமிட்டனர். உடனே ஹிஜாப் அணிந்திருந்த மாணவி கொந்தளித்து "அல்லாஹு அகபர்" என முழக்கமிட்ட வீடியோ சமூக வலைதங்களில் வைரலாக பரவி வருகிறது.

அதே போல், ஷிமோகா மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளில், ஒரு பெரும் சர்ச்சை வெடித்தது. தேசியக்கொடி ஏற்றப்பட்டு இருந்த கம்பத்தில் ஏறி ஒரு மாணவர் தேசிய கொடியை கழற்றி அதற்கு பதிலாக காவி துண்டை பறக்கவிட்டார். அப்போது ஜெய் ஸ்ரீராம் என மாணவர்கள் முழக்கமிட்டனர். இந்த வீடியோ சமூக வலைதங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த சம்வபம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து கவிஞர் வைரமுத்து வெளியிட்ட ட்விட்டர் பதிவில், கல்வியின் நோக்கங்களுள் ஒன்று பிரிந்துகிடக்கும் சமூகத்தை ஒருகூரையின் கீழ் ஒன்றுபடுத்துவது.. ஒன்றுபட்ட சமூகத்தை இரண்டுபடுத்துவது அல்ல.. ஆடை என்பது மானம்; எந்த ஆடை என்பது உரிமை இரண்டையும் பறிக்க வேண்டாம் என்று குறிப்பிட்டுள்ள கவிஞர் வைரமுத்து இஸ்லாம் என்பது இந்தியாவில் தான் சிறுபான்மை ஒடுக்க வேண்டாம் எனவும் கேட்டு கொண்டார்.