6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மின்பற்றாக்குறை..! தொடர்ந்தால் 38 ஆண்டுகளுக்கு முந்தைய மின்தட்டுப்பாடு நிலை ஏற்படும் - எச்சரிக்கை!

இந்தியாவில் கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு  மின்பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், இதே நிலை தொடர்ந்தால், கடந்த 38 ஆண்டுகளுக்கு முந்தைய மின்தட்டுப்பாடு நிலை ஏற்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். 

6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மின்பற்றாக்குறை..! தொடர்ந்தால் 38 ஆண்டுகளுக்கு முந்தைய மின்தட்டுப்பாடு நிலை ஏற்படும் - எச்சரிக்கை!

இந்தியாவில் கோடை வெப்பம் சுட்டெரித்து வருவதால், கடும் வெயில் வாட்டி வருகிறது. வெப்பத்தை தணித்து கொள்ள மின்விசிறி, ஏர் கண்டிஷனர் உள்ளிட்ட மின் உபகரணங்களின் பயன்பாடும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் நாட்டில் மின்சார பயன்பாடு அதிகரித்து, கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மின் தேவை ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் மற்றும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். 

இதற்கு வெப்ப அலையால் மின் பயன்பாடு அதிகரிப்பு மற்றும் கொரோனாவுக்கு பிந்தைய பொருளாதார மீட்சியே  காரணம் என சொல்லப்படுகிறது. குறிப்பாக கொரோனா காலக்கட்டத்தில், பலரும் வீட்டிலிருந்து பணியாற்றியதால், பகல் வேளைகளில் மின்தேவை அதிகரித்ததாகவும், இதனை ஈடுகட்ட தேவையான மின்சாரம் சூரிய சக்தி மூலம் கிடைத்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

ஆனால் தற்போது பகல் வேளையை விட இரவு நேரங்களில் மின்சாரம் பயன்படுத்தப்படுவது அதிகரித்துள்ளதால்,  சோலார் பேனலால் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியாத நிலை காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர கடந்த 9 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதும், மின்பற்றாக்குறைக்கு காரணமாக சொல்லப்படுகிறது. 

மேலும் 80 சதவீதம் நிலக்கரி உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டாலும், அவற்றை ரயில்வே துறையால் விரைந்து விநியோகிக்க முடியாமல் இருப்பதாகவும், இறக்குமதிக்கான நிலக்கரி விலையும் அதிகரித்துள்ளதால் பல நிறுவனங்கள் இயங்காமல் இருப்பதாகவும் கூறப்படுகிறது.  

இந்த சூழ்நிலை காரணமாக வரும் நாட்களில் மேலும் பல மின்தடை நிலையை மக்கள் எதிர்கொள்ள நேரிடும் எனவும், மின்பற்றாக்குறை நிலை 38 ஆண்டுகளில் இல்லாத நிலையை எட்டும் எனவும் அதிகாரிகள் மற்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.