நிதியமைச்சர் தாக்கல் செய்த பொருளாதார ஆய்வறிக்கையில் கூறப்பட்டிருப்பது என்ன...?

நடப்பு நிதியாண்டில் சர்வதேச அளவில் இந்தியப் பொருளாதாரம் 7 சதவீதமாக உயரும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
2023 - 2024ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறார். தொடர்ந்து அதற்கு முன்னோட்டமாக பொருளாதார ஆய்வறிக்கையை மக்களவையில் அவர் இன்று தாக்கல் செய்தார். ஆய்வறிக்கை விவரங்களின்படி, 2023 முதல் 2024ம் நிதியாண்டில் இந்தியாவின் வளர்ச்சி 6 புள்ளி 5 சதவீதமாக உயரும் எனவும், உலகிலேயே வேகமாக வளரும் பொருளாதார நாடாக இந்தியா தொடரும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையும் படிக்க : பேனா வைப்பதை எதிர்க்கவில்லை...கடலில் வைப்பதையே எதிர்கிறோம்...கருத்துக் கேட்பு கூட்டத்தில் சலசலப்பு!
நடப்பு நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7 சதவீதமாக வளரும் எனவும், நிதியாண்டின் இரண்டாம் பாதியில் ஏற்றுமதி வளர்ச்சி மிதமாக இருக்கும் எனவும் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. வாங்கும் திறன் சமநிலை அடிப்படையில் உலகின் 3ஆவது பெரிய நாடாகவும், மாற்று விகிதத்தின் அடிப்படையில் 5ஆவது பெரிய நாடாகவும் இந்தியா திகழ்வதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
கொரோனாவில் இருந்து இந்தியா மீள்வது ஒப்பீட்டளவில் விரைவாக இருந்ததாகவும், உலக அளவில் அசாதாரண சவால்களை இந்தியா திறம்பட கையாண்டதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. கடந்த ஆண்டில் ஜனவரி முதல் நவம்பர் மாதம் வரையிலான காலத்தில் சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில்துறைக்கான கடன் வளர்ச்சி சராசரியாக 30 புள்ளி 5 சதவீதம் வரை அதிகரித்ததாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து அவைத்தலைவர் உரையுடன் மக்களவையும் மாநிலங்களவையும் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது.