எனக்குத் தொடக்கக் கல்விக் கிடைப்பதே கடினமாக இருந்தது- இந்திய குடியரசுத் தலைவர் முர்முவின் உருக்கமான பேச்சு:

இன்று குடியரசுத் தலைவராக பதவியேற்ற திரௌபதி முர்மு, தனது உரையில் பல மனமுருகும் கருத்துகளைப் பகிர்ந்துக் கொண்டார். மேலும், பல வாக்குறுதிகளையும் கொடுத்திருக்கிறார். அவற்றை அனைவரும் கைத்தட்டி வரவேற்றனர்.

எனக்குத் தொடக்கக் கல்விக் கிடைப்பதே கடினமாக இருந்தது- இந்திய குடியரசுத் தலைவர்  முர்முவின் உருக்கமான பேச்சு:

இந்தியாவின் மிகவும் இளமையான மற்றும் பழங்குடியினத்தைச் சேர்ந்த முதல் குடியரசு தலைவராக இன்று திரௌபதி முர்மு, பதவியேற்றார். சுதந்திர இந்தியாவின் 15வது குடியரசு தலைவராக பதவியேற்ற முர்மு, 75 ஆண்டுகால ஆட்சியில், இரண்டாவது பெண் குடியரசு தலைவர், முதல் பழங்குடியின குடியரசுத் தலைவர் என பல பெருமைகள் கொண்ட முர்மு, தனது பதவியேற்பின் போது, உறுதிமொழிகள்  ஏற்ற பின் சில கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.

இந்தியா சுதந்திரம் பெற்று வைர விழா கொண்டாடும் இந்த ஆண்டில் குடியரசு தலைவராக பதவியேற்ற திரௌபதி முர்முவிற்கு அனைவரும் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.

ஜுஹார் என, தனது தாய்மொழியில் பேச்சைத் தொடங்கிய குடியரசுத் தலைவர் முர்மு, “வணக்கம்! இந்தியாவின் அனைத்து குடிமக்களின் நம்பிக்கைகள், எதிர்பார்ப்புகள் மற்றும் உரிமைகளின் அடையாளமான இந்த புனித பாராளுமன்றத்தில் இருந்து அனைத்து சக குடிமக்களையும் நான் பணிவுடன் வாழ்த்துகிறேன். உங்கள் பாசம், நம்பிக்கை மற்றும் ஆதரவு எனது செயல்பாடுகள் மற்றும் பொறுப்புகளை நிறைவேற்றுவதில் எனக்கு மிகப்பெரிய பலமாக இருக்கும்” எனக் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், பல கருத்துகளை முன்வைத்தார். அதில், முக்கியமான பத்துக் கருத்துகள் என்ன என்று பார்க்கலாம்!

  • இந்த ஆண்டோடு, நம் நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைகிறது. நமது சுதந்திரத்தின் அமிர்த விழாவைக் கொண்டாடும் இந்த முக்கியமான தருணத்தில் நாடு என்னை குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுத்துள்ளது. 

  • நாடு சுதந்திரம் அடைந்து 50வது ஆண்டை கொண்டாடும் போது எனது அரசியல் வாழ்க்கை தொடங்கியது என்பது தற்செயல் நிகழ்வு. ஆனால், தற்போது இந்திய சுதந்திரத்தின் 75வது ஆண்டில் இன்று எனக்கு இந்தப் புதிய, பெரும் பொறுப்பு கிடைத்துள்ளது.

  • அடுத்த 25 ஆண்டுகால தொலைநோக்குப் பார்வையை அடைய இந்தியா தயாராகிக்கொண்டிருக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க நேரத்தில் இந்தப் பொறுப்பு எனக்குக் கிடைத்திருப்பது பெரும் பாக்கியமாக நான் நினைக்கிறேன்.


  • நாளை, அதாவது ஜூலை 26ம் தேதி கார்கில் விஜய் திவஸ். இந்த நாள், இந்தியப் படைகளின் வீரம் மற்றும் நிதானம் ஆகிய இரண்டிற்கும் அடையாளமாகும். இன்று, நாட்டின் ஆயுதப் படைகளுக்கும், நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும், கார்கில் விஜய் திவஸ் தினத்திற்கான எனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.



  • குடியரசுத் தலைவர் பதவியை எட்டியது எனது தனிப்பட்ட சாதனையல்ல, இது இந்தியாவில் உள்ள ஒவ்வொரு ஏழையின் சாதனை.



  • நான் பழங்குடி சமுதாயத்தை சேர்ந்தவள். ஆனால், வார்டு கவுன்சிலரில் தொடங்கி இன்று இந்திய குடியரசுத் தலைவராகி இருக்கிறேன். இதுதான் ஜனநாயகத்தின் தாயான இந்தியாவின் சிறப்பு. எங்கள் சகோதரிகள் மற்றும் மகள்கள் அனைவரும் மேன்மேலும் அதிகாரம் பெற வேண்டும் என்றும், நாட்டின் ஒவ்வொரு துறையிலும் தங்கள் பங்களிப்பை தொடர்ந்து அவர்கள் அதிகரிக்க வேண்டும் என்றும் நான் விரும்புகிறேன்.



  • என்னுடைய இந்தத் தேர்தல், இன்றைய இந்திய இளைஞர்கள் தங்களது கடுமையான பின்னணிகளில் இருந்து, புதிய பாதையில் பயணிக்கும் தைரியமும் அடங்கியிருக்கிறது. இன்று நான் இத்தகைய முற்போக்கான இந்தியாவை வழிநடத்துவதில் பெருமைப்படுகிறேன்.



  • இன்று, அனைத்து நாட்டு மக்களுக்கும், குறிப்பாக இந்திய இளைஞர்களுக்கும், இந்தியப் பெண்களுக்கும், இந்த நிலையில் பணிபுரியும் போது, ​​அவர்களின் நலன்கள் எனக்கு முதன்மையாக இருக்கும் என்று உறுதியளிக்கிறேன்.



  • கொரோனா தொற்றின் உலகளாவிய நெருக்கடியை எதிர்கொள்வதில் இந்தியா காட்டிய திறன், உலகம் முழுவதும் இந்தியாவின் நம்பகத்தன்மையை மேம்படுத்தியுள்ளது. சில நாட்களுக்கு முன்பு, இந்தியா 200 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசியைப் பயன்படுத்தி, சாதனையை படைத்திருந்தது. இந்த முழுப் போரிலும் இந்திய மக்கள் காட்டிய கட்டுப்பாடு, தைரியம் மற்றும் ஒத்துழைப்பு ஒரு சமூகமாக நமது வளர்ந்து வரும் வலிமை மற்றும் உணர்திறன் ஆகியவற்றின் அடையாளமாகும்.



  • எனது இந்த பதவியேற்பு, பலருக்கும் ஒரு பெரிய முன்மாதிரியாக அமையும். இந்தியாவில் வறுமையானவர்கள் கனவும் காணலாம். மேலும் அவற்றை நிரைவேற்றவும் முடியும் என்பதை எடுத்துக் காட்டுகிறது.


இந்தியா சுதந்திரம் அடைந்ததற்குப் பிறகு பிறந்த முதல் குடியரசு தலைவராக இருக்கும் முர்மு, வி.வி. கிரிக்கு அடுத்தப்படியாக ஒடிஷாவில் இருந்து வந்த இரண்டாவது குடியரசுத் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தனது பதவியேற்பு விழாவில் அவர் பேசியது, அங்கிருந்த அனைவரையும் நெகிழ வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.