மூன்று குரங்கு சின்னங்களைப் போல இருக்க முடியாது!! மத்திய அரசின் புதிய ஒளிப்பதிவு வரைவுக்கு கமலஹாசன் எதிர்ப்பு!!

ஒளிப்பதிவு வரைவு 2021-க்கு கமலஹாசன் எதிர்ப்பு!!

மூன்று குரங்கு சின்னங்களைப் போல இருக்க முடியாது!! மத்திய அரசின் புதிய ஒளிப்பதிவு வரைவுக்கு கமலஹாசன் எதிர்ப்பு!!
சினிமா, ஊடகம் மற்றும் கல்வி எப்போதுமே இந்தியாவின் மூன்று குரங்குகளாக இருக்காது' என கமலஹாசன் தெரிவித்துள்ளார். 
 
ஒளிப்பதிவு சட்ட வரைவு 2021-ஐ பொதுமக்கள் கருத்திற்காக வெளியிட்டுள்ளது மத்திய அரசு. ஜூலை 2 வரை மக்கள் பார்வைக்காக இந்த வரைவு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்த நிலையில் இந்த வரைவு மசோதாவிற்கு எதிராக மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், நடிகருமான கமலஹாசன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கண், வாய், காதுகளை அடைத்துக் கொண்டு இருக்கும் இந்தியாவின் மூன்று குரங்கு சின்னங்களாக ஒருபோதும், சினிமா, ஊடகம் மற்றும் கல்வி மூன்றும் இருக்காது என தனது ட்விட்டர் பக்கத்தில் காட்டமாக பதிவிட்டுள்ளார். அதன் சுதந்திரத்தை நசுக்கப் பார்த்தால் அது மிகப்பெரிய பாதிப்பையே உண்டாக்கும் எனவும், இந்த சட்டத்திருத்தத்தை எதிர்த்து அனைவரும் குரல் கொடுப்போம் எனவும் பதிவிட்டுள்ளார். 

ஒளிபதிவு சட்டம் 1952 -ஐ திருத்தி, மத்திய அரசுக்கு திருத்த அதிகாரங்களை வழங்க முன்மொழிகிறது இந்த புதிய வரைவு. மத்திய அரசு, ஏற்கனவே சான்று வழங்கப்பட்ட படங்களின் சான்றுகளை திருத்தம் செய்வதற்கான அதிகாரங்கள் கிடையாது என்பதை கர்நாடக உயர் நீதிமன்றம் ஏற்கனவே அறிவித்துள்ளது. மேலும் இதனை உச்ச நீதிமன்றம் 2020ம் ஆண்டு நவம்பர் மாதம் மீண்டும் உறுதி செய்தது குறிப்பிடத்தக்கது. 

 
ஆனால் இந்த புதிய வரைவு, மத்திய அரசின் தலையீட்டிற்கு இடம் அளிக்கிறது. இதுபோன்று புதிய வரைவின் சில மாற்றங்களுக்கு திரைப்பட வல்லுநர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.