உட்கட்சி பூசலில் சிக்கித் தவிக்கும் கர்நாடக அதிமுக...!

உட்கட்சி பூசலில் சிக்கித் தவிக்கும் கர்நாடக அதிமுக...!

கட்சித் தலைமை கூட்டணிக்கு பிரச்சாரம் செய்வது குறித்து முடிவெடுப்பதற்கு முன்பே பாஜக வேட்பாளர்களுக்கு கர்நாடக அதிமுக நிர்வாகிகள் ஆதரவு தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அண்ணாமலை குறித்து எடப்பாடி மற்றும் அதிமுக மூத்த கட்சி தலைவர்கள் கடும் விமர்சனம் வைத்த நிலையில் பாஜக அதிமுக கூட்டணி உறவு முறிந்து விட்டதாக கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமி டெல்லியில் அமித்ஷாவை சந்தித்த பிறகு "கூட்டணியில் எந்த விரிசலும் கிடையாது தொடர்ந்து பாஜகவுடன் கூட்டணியில் பயணிக்கிறோம்" என்று அறிவித்தார். கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்த நிலையில் இறுதி நாளில் பாஜக மேலிடம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க தங்கள் வேட்பாளர்கள் வேட்பு மனுவை வாபஸ் பெறுவதாக தெரிவிக்கபட்டது. 

ஒருபுறம் வேட்பு மனு வாபஸ் பெறப்பட்டாலும் மறுபுறம் இதுவரை கர்நாடக சட்டமன்றத் தேர்தலுக்கு பாஜக கட்சியை ஆதரித்து அதிமுக வாக்கு வங்கிகள் உள்ள தொகுதிகளில் அதிமுக தலைவர்கள் பிரச்சாரம் செய்வது குறித்து இதுவரை எந்தவித அதிகாரப்பூர் முடிவும் எடுக்கப்படவில்லை. இரண்டு நாட்களில் எடப்பாடி பழனிச்சாமி இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்ட பிறகு தாங்கள் தேர்தல் களத்தில் பரப்புரை பணியாற்ற உள்ளதாக கர்நாடக மாநில அதிமுக மாநில செயலாளர் எஸ் டி குமார் தெரிவித்துள்ளார்.

ஆனால் கட்சி தலைமை முடிவெடுப்பதற்கு முன்பாக கர்நாடக அதிமுக அண்ணா தொழிற்சங்க செயலாளர் அன்பு நேற்று கோலார் தங்க வயல் தொகுதியில் பாஜக மூத்த தலைவர்களை சந்தித்து அதிமுக சட்டமன்றத் தேர்தலில் முழு ஆதரவு வழங்குவதாக தெரிவித்துள்ளார். பாஜக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சம்பங்கி, கோலார் தொகுதியை சேர்ந்த பாஜக மேலவை உறுப்பினர் நாராயண சாமி ஆகியோரை நேரில் சந்தித்த அன்பு பாஜக வேட்பாளர் அஸ்வினி யை வெற்றி பெற முழு பலத்தோடு அதிமுக கட்சி நிர்வாகிகள் தேர்தல் களத்தில் பரப்புரையாற்றுவார்கள் என உத்தரவாதம் அளித்துள்ளார். 

இன்று முதல் அதிமுக நிர்வாகிகள் கோலார் தங்க வயலில் பாஜக வேட்பாளரை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்சி மேலிடம் முடிவு எடுப்பதற்கு முன்பே அதிமுக நிர்வாகிகள் பல அணிகளாக பிரிந்து பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து பிரச்சாரத்தை துவங்கியிருப்பது கட்சி தலைமைக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க:வேட்புமனு திரும்பப் பெற 50 லட்சம்...! பாஜக அமைச்சர் மீது வழக்கு...!!