இன்னும் சிறிது காலத்தில் மிகப்பெரிய திட்டம் வரப்போகிறது... சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி உரை...

நாட்டின் உள்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து வசதியை மேம்படுத்த நூறு லட்சம் கோடி ரூபாயில் ‘காதி ஷக்தி’ என்ற மேம்பாட்டு திட்டம் கொண்டு வரவுள்ளதாகவும், இதன் மூலம் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும் எனவும் பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

இன்னும் சிறிது காலத்தில் மிகப்பெரிய திட்டம் வரப்போகிறது... சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி உரை...

நாடு முழுவதும் இன்று 75-வது சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடியை ஏற்றி, மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டார். அதன் பின் உரையாற்றிய அவர், நூறாவது ஆண்டு சுதந்திரத்தின் போது தலை சிறந்த இந்தியாவாக நாடு உருவெடுக்க வேண்டும் என வாழ்த்தினார். அப்போது ஒலிம்பிக்கில் சாதித்த  வீரர்களை பாராட்டிய அவர், அவர்கள் நமது மனதில் இடம்பிடித்தது மட்டுமல்லாமல் எதிர்கால சந்ததியினரை ஊக்குவிக்கும் வகையில் விழிப்புணர்வினையும் ஏற்படுத்தியுள்ளதாக பாராட்டினார்.

கொரோனா பெருந்தொற்று காலத்தில் அரசு சார்பில்  80 கோடி ஏழை மக்களுக்கு இலவசமாக ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டதாக மோடி தெரிவித்தார். கிராமங்கள்- நகரங்களிடையிலான வித்தியாசத்தை போக்க, புதிதாக நான்கரை கோடி வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வசதிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இந்தியாவில் போதும் என்ற நிலை உருவாக, கிராமங்களில் நூறு சதவீதம் சாலை, 100 சதவீதம் பேருக்கு வங்கி கணக்கு, தகுதியுடைய 100 சதவீதம் பேருக்கு  உஜ்வாலா திட்டத்தின் கீழ் கேஸ் இணைப்பு வழங்கப்பட வேண்டும் என கூறினார். அதுமட்டுமல்லாது இன்றைய டிஜிட்டல் தொழில்நுட்ப வளர்ச்சியால் கிராமங்கள் வரை இணைய  சேவை வழங்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.  

தொடர்ந்து  விவசாயிகள் பற்றி பேசிய அவர், அவர்கள் தான் நாட்டின் பெருமைக் குரியவர்கள் என மோடி தெரிவித்தார். அவர்களில் பெரும்பாலான விவசாயிகள் 2 ஹெக்டேருக்கும் குறைவான விவசாய நிலங்களை வைத்திருப்பதாக குறிப்பிட்ட மோடி, சிறிய விவசாயிகளை கவனத்தில் கொண்டே கொள்கைகளை அரசு வகுத்து வருவதாக தெரிவித்தார். தொழில் துறையிலும் இந்தியா வளர்ந்து வருவதாக பெருமிதம் தெரிவித்த மோடி, 3 பில்லியன் டாலர் மதிப்பிலான செல்போன்களை இந்தியா ஏற்றுமதி செய்துள்ளதா கவும், வரும்நாட்களில் உற்பத்தி நிறுவனங்கள் தயாரிக்கும் பொருட்கள்  சர்வதேச அளவில் இந்தியாவின் விளம்பர தூதராக இருக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

விரைவில் இந்தியாவின் ஒவ்வொரு மூலை முடுக்குகளை இணைக்கும் வகையில் 75 வந்தே பாரத் ரயில்களை இந்திய ரயில்வே துறை இயக்க உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாது சிறுமிகளின் கோரிக்கைக்கு இணங்க விரைவில் சைனிக் பள்ளிகளும் திறக்கப்படும் என அவர் கூறினார்.  பாரீஸ் பருவநிலை மாற்றம் தொடர்பான ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்ட ஒரே நாடு இந்தியா என பெருமிதம் தெரிவித்த மோடி, மூவர்ண வெளிச்சத்தில் தேசிய ஹைட்ரஜன் திட்டத்தை அறிமுகம் செய்வதாக மோடி தெரிவித்துள்ளார்.