நாடு முழுவதும் பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணி தொடக்கம் : ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்திக் கொண்ட முதியவர்கள்!!

நாடு முழுவதும்  பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணி துவங்கிய நிலையில், மக்கள் ஆர்வமுடன் வந்து தடுப்பூசி செலுத்திக் கொண்டு செல்கின்றனர்.

நாடு முழுவதும் பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணி தொடக்கம் : ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்திக் கொண்ட முதியவர்கள்!!

இந்தியாவில் கொரோனாவுக்கு இடையே உருமாறிய ஒமிக்ரானும் பரவத் தொடங்கியுள்ளது. இதனால் தினசரி பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் 2 லட்சத்தை நெருங்கி வருகிறது. இந்த நிலையில், தொற்றினால் ஏற்படும் உயிரிழப்புகளை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில், இரு டோஸ் செலுத்திய 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், முன்களப்பணியாளர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் ஆகியோரு்கு 9 மாதங்களுக்கு பின் இன்று முதல் பூஸ்டர் டோஸ் செலுத்தப்பட்டு வருகிறது. 

பீகார் மாநிலம் பாட்னாவில், இணை நோய் உள்ள 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் ஆர்வமுடன் வந்து முன்னெச்சரிக்கை தடுப்பூசியை செலுத்திக் கொண்டனர். அவர்களுக்கு ஏற்கனவே இரண்டு டோஸ் செலுத்தப்பட்ட அதே தடுப்பூசி பூஸ்டர் டோஸாக செலுத்தப்பட்டது.

டெல்லி ஆர்.எம். எல். மருத்துவமனையில், முன்களப்பணியாளர்கள் மற்றும் இணை நோய் உள்ள 60 வயது முதியவர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதனை செலுத்திக் கொண்ட முதியவர் ஒருவர், தடுப்பூசிகளால் பக்கவிளைவுகள் இல்லை எனவும், தான் நலமுடன் இருப்பதால் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். 

தெலங்கானாவில் இணை நோயுடைய 60 வயதுக்கு மேலான முதியவர்கள், பூஸ்டர் தடுப்பூசியை செலுத்திக் கொண்டனர். ஐதராபாத்தில் உள்ள அரசு யுனானி மருத்துவமனையில், பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணியை அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் டி.ஹரிஷ் ராவ் நேரில் ஆய்வு செய்தார்.

அதேபோல், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஸ்ரீ அடல் பிகாரி வாஜ்பாய் மருத்துவமனையில், பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணியை முதல்வர் பசவராஜ் பொம்மை தொடங்கி வைத்தார்.