கடன் வழங்கி தொல்லை.. சீன செயலிகள் மீது நடவடிக்கை - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

கடனை திருப்பி செலுத்த கோரி தொல்லை கொடுக்கும் சீன செயலிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

கடன் வழங்கி தொல்லை.. சீன செயலிகள் மீது நடவடிக்கை - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

மக்களவையில் வங்கி வைப்புகளுக்கான காப்பீடு தொடர்பான விவாதம் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு பேசிய தமிழக எம்.பி வேலுசாமி, கூட்டறவு மற்றும் வங்கி சாரா பிற நிதி நிறுவனங்களில் சேமிக்கப்படும் வைப்புத்தொகையை திரும்ப தர நிறுவனங்களுக்கு 90 நாள் கால அவகாசம் வழங்கப்படுவதாக தெரிவித்தார்.

ஆனால் ஏழைகளின் நலனை கருத்தில் கொண்டு அந்த கால அவகாசத்தை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க உள்ளதா என கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்த நிதித்துறை இணை அமைச்சர், அது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக குறிப்பிட்டார்.

இதேபோல் மக்களவை உறுப்பினர் சண்முக சுந்தரமும், சீனாவின் மொபைல் செயலிகளால் மக்கள் கடும் அவதிக்குள்ளாவதாக குறிப்பிட்டார். இந்த செயலிகள் மூலம் கடன் பெற்றவர்களின் விவரங்களை அறிந்து கொண்டு, அவர்களுக்கு தொடர் தொல்லை கொடுக்கப்படுவதாகவும், இதனை நெறிப்படுத்த அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கை என்ன என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் நிர்மலா சீதாராமன், இதுபோன்ற சம்பவங்களை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், ரிசர்வ் வங்கியின் மசோதாவிலும் இதுதொடர்பான திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் கூறினார். அதுமட்டுமல்லாது இதுசார்ந்த புகார்கள் நாடு முழுவதும் பரவலாக பதியப்பட்டுள்ளதாகவும், ஆர்பிஐ வங்கியும் இதனை கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய தமிழக எம்.பி டி.ஆர் பாலு, சாமானியர்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக குறைந்த தொகையை வங்கிகளில் சேமிப்பதாக குறிப்பிட்டார்.

ஆனால் அவர்கள் வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாத பட்சத்தில் அவர்களின் அசையா சொத்துக்களை வங்கியே பறித்து கொள்வதாக குற்றஞ்சாட்டிய அவர், தொழில் நிறுவனங்களிடம் இதுபோன்ற நடைமுறை பின்பற்றப்படுவதில்லை என குறிப்பிட்டார்.  இதற்கு பதிலளித்த நிர்மலா சீதாராமன், கடன் வாங்கி திரும்ப செலுத்தாமல் இருப்பவர்களின் சொத்துக்களையே பொதுத்துறை வங்கி விற்க நேரிடுவதாக தெரிவித்தார். கடனை செலுத்தாத நிறுவனங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.