காடுகளுக்குள் தொடர்வண்டி, சாலை, தொலைத்தொடர்பு... வன உரிமைச் சட்டத்தில் தாராளமயமாக்கல் கொள்கை...

நாடு முழுவதும் 400 நகர காடுகளை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் அஸ்வினி குமார் சௌபே தெரிவித்துள்ளார். 

காடுகளுக்குள் தொடர்வண்டி, சாலை, தொலைத்தொடர்பு... வன உரிமைச் சட்டத்தில் தாராளமயமாக்கல் கொள்கை...

மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் அஸ்வினி குமார் சௌபே, ஜம்மு காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில், 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த நிலையில், அங்குள்ள பஞ்சாயத்து ராஜ் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்களைச் சந்தித்துப் பேசிய அவர், நகர்ப்புறங்களில் பசுமை பரப்பை அதிகரிக்கும் நடவடிக்கையாக, நாடு முழுவதும் 400 நகரக் காடுகளை உருவாக்கும் திட்டத்தை மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும், அதன்படி ராம்பன் மாவட்டத்திலும் ஒரு நகர காடு உருவாக்கப்படும் என்றும் கூறினார்.

மேலும், குழந்தைகளிடையே சுற்றுச்சூழலுக்கு உகந்த அணுகுமுறையை ஊக்குவிக்கும் நோக்கில், கல்வி நிறுவனங்களில் நாற்றங்கால் அமைக்க திட்டமிட்டு உள்ளதாகக் கூறிய அமைச்சர், காடுகளின் மேம்பாடு மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், வன உரிமைச் சட்டம் தொடர்பான தாராளமயமாக்கப்பட்ட கொள்கையும் செயல்படுத்தப்பட்டு வருவதாகக் கூறியுள்ளார்.

இந்த நிலையில், அமைச்சர் குறிப்பிட்டுள்ள தாராளமயமாக்கப்பட்ட கொள்கையின்படி, காடுகளுக்குள் தொடர்வண்டி, சாலைகள், தொலைத்தொடர்பு உள்ளிட்ட வளர்ச்சிப் பணிகளை விரிவாக்கம் செய்யும்போது வனத்துறையிடம் அனுமதி பெறத் தேவையில்லை என்ற சட்டம் திருத்தப்பட்டுள்ளது. காடுகளில் தனியாருக்குச் சொந்தமான இடங்களில் கட்டுமான பணிகளை மேற்கொள்ள அனுமதியளித்ததோடு, வன எல்லை என்பதிலிருந்து அவற்றை விடுவிக்கலாம் என்பதை குறிப்பிட்டுக் காட்டும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், இத்தகைய நடவடிக்கைகள் காடுகளின் பரப்பளவைக் குறைக்குமா? அல்லது அதிகரிக்க உதவுமா? எனக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அதேபோன்று, வனத்தின் நடுவே இருக்கும் கனிம வளங்களை எடுப்பதற்கு ஒப்புதல் அளித்திருப்பதும், காடுகளில் ஆராய்ச்சி செய்வதற்காகவும், தகவல்களைச் சேகரிப்பதற் காகவும், அறிவியல் ஆய்வு மையங்களை அமைக்க அனுமதி அளித்திருப்பதும் காடுகளின் உயிரோட்டத்தைக் கெடுத்து, அங்குள்ள பல்லுயிர் பெருக்கத்தை அழிப்பதோடு உணவுச் சங்கிலியையும் பெருமளவில் பாதிக்கும் என்றும் எச்சரிக்கை விடுக்கின்றனர்.