தாய்மை பெண்கள் அடையும் உச்ச நிலை...!!!

தாய்மை பெண்கள் அடையும் உச்ச நிலை...!!!

தாய்மை, தியாகம், சுயநலமின்மை போன்ற குணாதிசயங்களை பெற ஆண்கள் தவம் தான் செய்ய வேண்டும். ஆனால் பெண்களுக்கு இவை இயல்பாகவே அமைந்துள்ளன என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்தார்.

தமிழ்நாடு பெண் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் மகளிர் தினவிழா சென்னை அடையாறில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாய்மை பெண்கள் அடையும் உச்ச நிலை எனவும், அதற்கு பெரும் தியாகத்தைச் செய்கின்றனர் எனவும் சுயநலமில்லாமல், மன வலிவுடன் குடும்பத்தை நடத்துகின்றனர் பெண்கள் என்றார்.

இதுபோன்ற குணாதிசயங்கள்  பெற ஆண்கள் தவம் தான் செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்ட நீதிபதி, ஆனால் பெண்களுக்கு இக்குணங்கள் இயல்பாகவே உள்ளது என்றும் தெரிவித்தார்.

உடல் ரீதியான கவர்ச்சியில் ஆரம்பித்தாலும், மனைவி என்பவர் இறுதியில் தாயாகி விடுகிறார் என்பதை ஒவ்வொரு ஆணும் உணரவேண்டும் எனக் குறிப்பிட்டார். 

வழக்கறிஞர்கள் தொழிலில் நிறைய பெண்கள் வர வேண்டும் எனவும், குடும்ப நல நீதிமன்றத்தில் மட்டும் ஆஜராகாமல் குற்ற மற்றும் உரிமையியல் வழக்குகளையும் ஏற்று நடத்த வேண்டும் என அறிவுறுத்தினார்.

மாநில மகளிர் ஆணைய தலைவி ஏ.எஸ். குமாரி, மகளிர் தினத்தை ஒட்டி தள்ளுபடி விற்பனை செய்வது வருத்தத்துக்குரியது எனவும், பெண்களுக்கு அதிகாரம் வழங்குவது குறித்து பேசினாலும், இன்னும் பெண்கள் பாதிப்பு தொடரவே செய்கிறது என்றார்.

மகளிர் ஆணையத்துக்கு 4,500 மனுக்கள் வந்திருக்கின்றன எனவும், அதில் கிராமங்களில் இருந்து தான் அதிகம் எனவும்  குறிப்பிட்டார்.

இதையும் படிக்க:   ராணுவ வீரரின் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்...!!!