பிர்சா முண்டாவின் நினைவாக ராஞ்சியில் அருங்காட்சியகம்... பிரதமர் மோடி திறந்து வைத்தார்...

பழங்குடியின புரட்சியாளர் பிர்சா முண்டாவின் பிறந்த நாள் பழங்குடியினர் பெருமை தினமாக கொண்டாடப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். 

பிர்சா முண்டாவின் நினைவாக ராஞ்சியில் அருங்காட்சியகம்... பிரதமர் மோடி திறந்து வைத்தார்...

பழங்குடிகளின் தந்தை மற்றும் பழங்குடியின புரட்சியாளர் என போற்றப்படும் பிர்சா முண்டா-வின் 146-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை பழங்குடியினர் பெருமை தினமாக கொண்டாடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் பிர்சா முண்டா-வின் பிறந்த நாளை முன்னிட்டு ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் அவரது நினைவாக அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத்தை பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

அப்போது பேசிய அவர், பிர்சா முண்டாவின் பிறந்த நாள் பழங்குடியினர் பெருமை தினமாக கொண்டாடப்படும் என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பெருமை தெரிவித்தார். பழங்குடியின சகோதர, சகோதரிகள் மற்றும் குழந்தைகளுடன் தனது வாழ்க்கையின் பெரும் பகுதியைக் கழித்துள்ளதாகவும் அவர்களின் இன்ப துன்பங்கள் மட்டுமின்றி அன்றாட வாழ்க்கை தேவைகளுக்கும் தான் சாட்சியாக இருப்பதாக தெரிவித்த அவர், ஆகையால் இந்நாள் தனிப்பட்ட முறையில் தனது உணர்வோடு கலந்திருப்பதாகவும் கூறினார்.

அடல் பிஹாரி வாஜ்பாயின் மன உறுதியால், ஜார்க்கண்ட் உருவானது எனவும், பழங்குடியினர் விவகாரங்களுக்கான தனி அமைச்சகத்தை உருவாக்கி, பழங்குடியினர் நலன்களை தேசத்தின் கொள்கைகளுடன் இணைத்த வாஜ்பாய்க்கு ஜார்க்கண்ட் நிறுவன தினமான இன்று அஞ்சலி செலுத்துவதாகவும் குறிப்பிட்டார்.

இதனிடையே டெல்லியில் பிர்சா முண்டாவின் பிறந்தநாளை முன்னிட்டு நாடாளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள பிர்சா முண்டா சிலையில் முன்பாக அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவ படத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உள்ளிட்ட தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.