பாஜக மீது படியும் புதிய ஊழல் புகார்...

பாஜக மீது படியும் புதிய ஊழல் புகார்...

5ஜி  தொலைத்தொடர்பு அலைககற்றைக்கான ஏலம் ரூ.1,50,173 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டியுள்ளது.  

2ஜி அலைக்கற்றை ஊழல்:

2ஜி அலைக்கற்றை ஊழல் முதல் முறையாக இயற்கை வளங்களின், குறிப்பாக அலைக்கற்றையின் மதிப்பை முன்வைத்தது. 120க்கும் மேற்பட்ட அலைக்கற்றை உரிமங்கள் மிகக் குறைந்த விலைக்கு விற்கப்பட்டதாக 2ஜி அலைக்கற்றை ஏலத்தின் போது அப்போதைய எதிர்கட்சியான பாஜகவால் குற்றஞ்சாட்டப்பட்டது.  தலைமை கணக்கு தணிக்கையாளர் அறிக்கையின்படி 2ஜி அலைக்கற்றை ஏலத்தில் அரசாங்கத்திற்கு ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது என தகவல் வெளியானது.

உயர் அதிகாரக் குழு:

இதனால் பல தரப்புகளில் இருந்தும் கண்டனம் எழுந்தது.  இதனைத் தொடர்ந்து இயற்கை வளங்களை எவ்வாறு ஒதுக்குவது என்பது குறித்த அணுகுமுறையை ஆய்வு செய்ய 2011 ஜனவரியில் மத்திய அரசால் உயர் அதிகாரக் குழு அமைக்கப்பட்டது . முன்னாள் நிதிச் செயலர் அசோக் சாவ்லா தலைமையிலான இக்குழுவிடம், அலைக்கற்றை போன்ற வளங்களின் வெளிப்படையான விநியோகத்திற்கான தரவுகளை தயாரிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டது.

குழு ஆய்வு அறிக்கை:

நிலக்கரி, கனிமங்கள், அலைக்கற்றை, பெட்ரோலியம், இயற்கை எரிவாயு, நிலம், நீர் மற்றும் காடுகள் ஆகிய எட்டு இயற்கை வளங்களை குழு ஆய்வு செய்தது. கமிட்டியின் 81 பரிந்துரைகளில் 69 பரிந்துரைகளை மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசு ஏற்றுக்கொண்டது.

ஏலம் போன்ற சந்தை தொடர்பான செயல்முறைகள் மூலம் மட்டுமே நிறுவனங்களுக்கு அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்று குழு பரிந்துரை செய்தது.

5ஜி அலைக்கற்றை ஊழல்:

5ஜி ஊழல் தற்போது ட்விட்டரில்  ட்ரெண்டிங்கில் உள்ளது.  இதனால் பாஜகவை கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.  குரல் மற்றும் குறுஞ்செய்தி பயன்பாட்டுக்கான 2ஜி அலைக்கற்றையின் மதிப்பே ரூ.1.76 லட்சம் கோடி என்றால்,  ஆக்மென்ட் ரியாலிட்டி மற்றும் மெட்டா போன்ற பல பயன்பாடுகளை கொண்ட 5ஜி அலைக்கற்றையின் மதிப்பு எவ்வாறு 1.5 லட்சம் கோடியாக இருக்கும் என்ற கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது .  

குற்றச்சாட்டு காரணம்:

5ஜி அலைக்கற்றை ஏலத்தில் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுப்பப்பட்டுள்ளது. ஏனெனில் முன்னர் அரசாங்கம் 5ஜி அலைக்கற்றையின் அடிப்படை விலையை ரூ.4.3 லட்சம் கோடியாக நிர்ணயம் செய்திருந்தது. ஆனால் ஏலம் ரூ.1.5 லட்சம் கோடிக்கு மட்டுமே விடப்பட்டுள்ளது. 2008 இல் ஐக்கிய மக்கள் கூட்டணியிலான அரசாங்கம் 2ஜி ஏலத்திற்கு 1.76 லட்சம் கோடி வசூலித்தது. ஆனால் இதற்கு எதிர்மாறாக 2022 இல் பாஜக அரசாங்கம் 5ஜிக்கு 4 லட்சம் கோடிகளுக்கான ஏலத்தில் 1.5 லட்சம் கோடிகளே வசூலித்துள்ளன.  ஐக்கிய மக்கள் கூட்டணியை விட மிகக் குறைவாகவே வசூலித்துள்ளனர்.

மக்கள் கருத்து:

 7 நாட்கள் நீடித்த 5ஜி ஏலம் இந்திய வரலாற்றிலேயே மிகப் பெரிய ஊழல் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்த ஏலத்திற்குப் பிறகு, சமூக வலைதளங்களில் #5G_Scam_Bjp என்ற ஹேஷ்டேக்குடன் மோடி அரசுக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். அனைத்துமே முன்னரே தீர்மானிக்கப்பட்டவை என்றும், ஏலம் வெறும் கண்துடைப்பு என்றும் மக்கள் கூறி வருகின்றனர்.

தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் நிறுவனமான ஜியோ அலைக்கற்றை ஏலத்தில்  மிகப்பெரிய அளவிலான ஏலத்தை எடுத்துள்ளது. மொத்த அலைக்கற்றை ஏலத்தில் கிட்டத்தட்ட பாதி அளவிலான 0.78 லட்சம் கோடி மதிப்பிலான அலைக்கற்றை ஜியோ நிறுவனத்திற்கு  ஏலம் கொடுக்கப்பட்டுள்ளது.

அலைக்கற்றை நிறுவனங்கள்:

தொலைத்தொடர்பு அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறுகையில், அதானி குழுமம் ரூ.212 கோடிக்கு 400 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றையை வாங்கியுள்ளது. ஜியோ  பல்வேறு அலைவரிசைகளில் 700 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றையை வாங்கியுள்ளது. 

பார்தி ஏர்டெல் நிறுவனம் 19,867 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றையை ரூ.43,084 கோடிக்கு வாங்கியுள்ளது. 18,784 கோடி மதிப்பிலான அலைக்கற்றையை வோடபோன் ஐடியா வாங்கியுள்ளது. 

மொத்தமாக ரூ.1,50,173 கோடிக்கு ஏலம் விடப்பட்டதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

முதல்கட்டமாக இந்தியாவின் 13 நகரங்களில் 5ஜி சேவை தொடங்கப்படும் என்றும் முதல் கட்ட பணிகள் ஆகஸ்ட்-செப்டம்பர் மாதங்களில் தொடங்கும் என்றும் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

முதல் 13 நகரங்கள்:

அகமதாபாத், பெங்களூர், சண்டிகர், சென்னை, டெல்லி, காந்திநகர், குருகிராம், ஹைதராபாத், ஜாம்நகர், கொல்கத்தா, லக்னோ, மும்பை மற்றும் புனே ஆகிய நகரங்கள் அடங்கும்.

பாஜகவின் ஊழல்கள்:

என்எஸ்இ ஊழல் - 5 லட்சம் கோடிகள், பிட்காயின் ஊழல், பிஎம் கிசான் இன்சூரன்ஸ் - 40000 கோடிகள், இப்போது 2.8 லட்சம் கோடிகள் மதிப்பிலான 5 ஜி ஊழல் என பட்டியலிடும் நெட்டிசன்கள், அவற்றைக் கேள்வி கேட்க யார் தயாராக இருக்கிறார்கள் எனவும் கேள்வியெழுப்பி வருகின்றனர்.