நிதி ஆயோக் 2022- திட்டங்களும் கோரிக்கைகளும்......

நிதி ஆயோக் 2022- திட்டங்களும் கோரிக்கைகளும்......

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான நிதி ஆயோக்கின் ஏழாவது கூட்டம் நேற்று நடைபெற்றது.  கொரோனா தொற்று காரணமாக காணொலி மூலம் நடைபெற்று வந்த கூட்டம் 2019க்கு பிறகு தற்போது நேரடியாக நடைபெற்றுள்ளது.

மக்களவை உறுப்பினர்கள்:

பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், உள்துறை அமைச்சர் அமித் ஷா, போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்காரி, வெளியுறவு துறை அமைச்சர் ஜெய் சங்கர், தகவல் தொழில்நுட்பதுறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், வர்த்தக துறை அமைச்சர் பியூஸ் கோயல், நிதி ஆயோக் துணை தலைவர் சுமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மாநில முதலமைச்சர்கள்:

எதிர்கட்சி முதலமைச்சர்கள் மம்தா பானர்ஜி, நவீன் பட்நாயக், பினராயி விஜயன், பகவந்த் மான், ஹேமந்த் சோரன் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.  தேசிய ஜனநாயக கூட்டணி முதலமைச்சர்களான சிவராஜ் சௌகான். யோகி ஆதித்யநாத், எம்எல் கட்டார், ஹிமந்தா பிஸ்வா சர்மா உள்ளிட்டோர்களும் கலந்து கொண்டனர்.

தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ், மத்திய அரசு எதிர்கட்சிகளை நடத்தும் அணுகுமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் கொரோனா தொற்று காரணமாக கூட்டத்தில் பங்கேற்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர்களின் கோரிக்கைகள்:

சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகேல் மத்திய வரிகளில் மாநிலங்களுக்கான ஒதுக்கீட்டை அதிகரிக்குமாறு கோரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது.  புதிய வரியால் சத்தீஸ்கரில் ஏற்பட்டுள்ள நிதி பற்றாக்குறையை சமாளிக்க ஜிஎஸ்டி இழப்பீட்டை அதிகரிக்க வேண்டும் எனவும் பூபேஷ் கேட்டுள்ளதாக தெரிகிறது.

இயற்கை பேரிடரால் அதிகம் பாதிக்கப்படுவதால் ஒடிஷாவை சிறப்பு மாநிலமாக அறிவிக்க வேண்டுமென ஒடிஷா முதலமைச்சர் நவீன் பட்நாயக் கேட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.  மேலும் அவர் மத்திய பட்டியலில் உள்ள தொலைத்தொடர்பு, ரயில்வே, வங்கி போன்றவைகளின் உள்கட்டமைப்புகளை ஒடிஷாவில் மேம்படுத்தவும் கோரிக்கை வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நவீன் பட்நாயக் மாநிலங்களுக்கிடையில் அல்லது மாநில- மத்திய அரசு இடையே பிரச்சினைகள் எழும்போது அதை நிதி ஆயோக் ஒரு குறை தீர்ப்பாளராக செயல்படலாம் எனவும் ஆலோசனை கூறியதாகவும் தெரிகிறது.

முக்கிய தீர்மானங்கள்:

வேளாண்மை பல்வகைப்படுத்தலின் முக்கியத்துவம் குறித்து விவாதிக்கப்பட்டதாக நிதி ஆயோக் முதன்மை செயல் அதிகாரி பரமேஸ்வரன் ஐயர் கூறியுள்ளார். மேலும்  சமையல் எண்ணெய்களில் தன்னிறைவு பெற வேண்டியதன் அவசியத்தையும் மோடி வெளிப்படுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.  தேசிய கல்வி கொள்கை 2020யை அனைத்து மாநிலங்களிலும் நடைமுறைப்படுத்துவது தொடர்பாக அனைத்து மாநிலங்களின் முதலமைச்சர்களுடன் விவாதிக்கப்பட்டதாகவும் பரமேஸ்வரன் கூறியுள்ளார்.

                                                                                                                        -நப்பசலையார்