பீகாரில் மலர்கிறது நிதிஷ்- லாலு கூட்டணி? ஆளுநரை இன்று மாலை சந்திக்கிறார் நிதிஷ்குமார்!!

பீகாரில் மலர்கிறது நிதிஷ்- லாலு கூட்டணி? ஆளுநரை இன்று மாலை சந்திக்கிறார் நிதிஷ்குமார்!!

பாஜகவுடனான  தேசிய ஜனநாயக கூட்டணியை முறித்து கொண்டுள்ள பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், லல்லுவின் ராஷ்டிரியா ஜனதா தள கட்சியுடன் கைகோர்க்க உள்ளதா தகவல் வெளியாகியுள்ளது.

நிதிஷ்குமாரை விமர்சித்து வந்த பாஜக மாநில தலைவர்கள்

பீகாரில் பாஜகவுடன் ஐக்கிய ஜனதா தளம்  கூட்டணி அமைத்து ஆட்சி செய்து வந்தது. இந்தக் கூட்டணியின்  முதல்வராக நிதிஷ்குமார் நீடித்து வந்தார். கூட்டணி சுமூகமாக இருந்த நிலையில், கடந்த சில நாட்களாக பாஜக மாநில தலைவர்கள் நிதிஷ்குமாரை விமர்சித்து வந்தனர். மேலும் ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு அதிக எண்ணிக்கையில் மத்திய அமைச்சரவையில் இடம் அளிக்க வேண்டும் என்றும், 2024ம் ஆண்டு மக்களவை தேர்தலுடன் சேர்த்து, ஓராண்டு முன்னதாகவே பீகார் சட்டப்பேரவை தேர்தலை நடத்த வேண்டும் எனவும் நிதிஷ்குமார் கூறி வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் இதற்கு பாஜக தலைமை செவிசாய்க்கவில்லை என சொல்லப்படுகிறது.

முக்கிய கூட்டங்களை புறக்கணித்து வந்த நிதிஷ்குமார்

அதேசமயம் பாஜகவின் செயல்பாடுகளால் அதிருப்தியில் இருந்த நிதிஷ்குமார் அண்மையில் நடைபெற்ற முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் பிரிவு உபசார விழா, நிதி ஆயோக் கூட்டம் ஆகியவற்றை புறக்கணித்ததாக தெரிகிறது.

பாஜக கூட்டணியில் இருந்து விலகினார் நிதிஷ்குமார்

இந்நிலையில், இன்று ஐக்கிய ஜனதா தள கட்சி எம்.பிக்கள், எம். எல்.ஏக்களை பாட்னாவில் உள்ள தனது வீட்டிற்கு வரவழைத்த நிதிஷ்குமார் பாஜகவுடனான கூட்டணியை முறித்து கொள்வதாக அறிவித்துள்ளார். அவரது முடிவுக்கு எம். எல்.ஏக்களும் முழு ஆதரவை அளித்துள்ளனர்.

நிதிஷ்குமாருக்கு ஆதரவுக்கரம் நீட்டிய காங்கிரஸ்

இதனிடையே அவருக்கு காங்கிரஸ் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தள கட்சிகள் ஆதரவு கரம் நீட்டியுள்ளன. இதில் தேஜஸ்வியின் ஆதரவை ஏறக்குறைய உறுதி செய்துள்ள நிதிஷ்குமார், அவருக்கு துணை முதல்வர் பதவியை வழங்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆளுநரை இன்று மாலை சந்திக்கிறார் நிதிஷ்குமார்

அதன்படி இன்று மாலை 4 மணிக்கு நிதிஷ்குமார், தேஜஸ்வி யாதவுடன் மாநில ஆளுநர் பாஹு சவுகானை சந்திக்க உள்ளதாகவும், அதனைத்தொடர்ந்து முக்கிய அறிவிப்புகளை அதிகாரப்பூர்வமாக வெளியிட உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.